https://republictn.com/

தமிழகத்தில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற மே 10 ஆம் தேதி, கட்சியின் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும் 10 முறை சட்டமன்ற உறுப்பினருமான சீனியர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரிடமிருந்து அத்துறை திரும்பப் பெறப்பட்டு, புதிய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் இருவேறு அரசியல் பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.

78 வயதான மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு, பட்ஜெட் தயாரிப்பு மற்றும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கும் நிதித்துறையின் அதீத பணிச்சுமையைக் குறைத்து, மக்கள் தொடர்புள்ள வருவாய்த்துறை வழங்கப்பட்டிருக்கலாம் என்றும், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமப்புறப் பகுதிகளையும் அடிமட்ட நிர்வாக அமைப்புகளையும் விரல் நுனியில் வைத்துள்ள அவர் வருவாய்த்துறையை மிகச் சிறப்பாக வழிநடத்த முடியும் என முதலமைச்சர் விஜய் கணக்கு போட்டிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இச்சூழலில், செங்கோட்டையன் வசமிருந்த நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டாக்டர் என். மரிய வில்சன், கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முத்திரை பதித்த ஒரு முக்கியத் தொழிலதிபராவார். சென்னை ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இவர், தமிழக அரசியலின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேபிஆர் குடும்பத்தின் மருமகனும், அக்குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் ஆவார்; தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக், எம்பிஏ முடித்துவிட்டு மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ள இவர், ஆசியாவிலேயே முதன்முறையாக ஐபிஎம் கிளவுட் ஆய்வகத்தைத் தனது கல்லூரியில் அமைக்கும் அளவிற்குத் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட கல்வியாளராகவும், காஞ்சிபுரம் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக இருந்து இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்குகிறார்.

தளபதி விஜயின் சமத்துவக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு த.வெ.க-வில் இணைந்து கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த இவர், கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு, ஆயுள் காப்பீடு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் நிதியுதவி போன்ற முக்கிய நிவாரணங்களை அறிவித்துப் பெரும் கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago