https://republictn.com/

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய்நாராயணன் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய்நாராயணன் நேற்று நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முந்தைய ஆட்சியில் தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ். ராமன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தப் பதவிக்கு விஜய்நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக அவர் பணியாற்றியுள்ளார். தற்போது இரண்டாவது முறையாக அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

விஜய்நாராயணன் குறித்து பார்க்கும்போது, 1977ஆம் ஆண்டு தனது கல்லூரிப் படிப்பை முடித்த அவர், பின்னர் 1982ஆம் ஆண்டு சட்டப் படிப்பை நிறைவு செய்தார். அதன் பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களிடம் ஜூனியராக தனது சட்டப் பணியை தொடங்கினார்.

தொடர்ந்து, சட்டத் துறையில் நீண்ட அனுபவம் மற்றும் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு, 2004ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

மேலும், விஜய்நாராயணனின் குடும்பமும் சட்டத் துறையில் குறிப்பிடத்தக்க பின்னணியைக் கொண்டுள்ளது. அவரது தந்தையின் சகோதரரான கே.கே. வேணுகோபால், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

அதேபோல், அவரது தந்தைவழி தாத்தா எம்.கே. நம்பியார், கேரளாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவராக இருந்துள்ளார். மேலும், அவரது தாய்வழி தாத்தா கே.எம். பணிக்கர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

சட்டத் துறையில் பாரம்பரிய பின்னணியையும், நீண்ட அனுபவத்தையும் கொண்ட விஜய்நாராயணன் தற்போது தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago