2026 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள எப்.ஐ.எச். (FIH) உலகக் கோப்பை ஹாக்கி தொடரை முன்னிட்டு, இந்திய ஹாக்கி அணிக்கான புதிய காவி நிற ஜெர்சியை ஹாக்கி இந்தியா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் பாரம்பரிய நீல நிற ஜெர்சி மாற்றப்பட்டிருப்பது, விளையாட்டு உலகைத் தாண்டி சமூக மற்றும் அரசியல் தளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஜெர்சி நிற மாற்றத்திற்குப் பின்னால் முழுக்க முழுக்க விளையாட்டு சார்ந்த தொழில்நுட்பக் காரணங்களே உள்ளன என்று ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
தற்போது நடைபெறும் பெரும்பாலான சர்வதேச ஹாக்கி போட்டிகள் நீல நிற செயற்கை புல்வெளி மைதானங்களில் நடத்தப்படுகின்றன. அத்தகைய மைதானங்களில் வீரர்கள் நீல நிற ஜெர்சி அணிந்தால், அவர்கள் மைதானத்தின் பின்னணியுடன் ஒன்றிப்போவது போன்ற தோற்றம் உருவாகிறது. இதனால் சக வீரர்களை உடனடியாக அடையாளம் காண்பதிலும், துல்லியமாக பந்தை பரிமாறுவதிலும் சிரமம் ஏற்படுவதாக பயிற்சியாளர்களும் சில வீரர்களும் தெரிவித்ததாக ஹாக்கி இந்தியா கூறியுள்ளது.

இதையடுத்து, மஞ்சள் அல்லது காவி நிறத்தை மாற்று ஜெர்சியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டதாகவும், தேசியக் கொடியின் ஒரு பகுதியாக இருப்பதால் இறுதியில் காவி நிறமே தேர்வு செய்யப்பட்டதாகவும் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு மஞ்சள் நிற ஜெர்சியும், 2018-ஆம் ஆண்டு வெளிர் நீல நிற ஜெர்சியும் மாற்று சீருடையாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் ஹாக்கி இந்தியா நினைவூட்டியுள்ளது. ஆனால், இந்த விளக்கம் அனைவரையும் திருப்திப்படுத்தவில்லை. இந்திய விளையாட்டு உலகில் “Men in Blue” என்ற அடையாளம் நீண்ட காலமாக இந்திய அணிகளின் பாரம்பரிய அடையாளமாக இருந்து வருகிறது.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வீரேன் ரஸ்குவின்ஹா, தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், “இது மிகவும் சங்கடமாக இருக்கிறது. இந்திய அணியின் பாரம்பரிய அடையாளமே நீல நிறம்தான். ரசிகர்கள் தங்களது அணியை நீல நிறத்திலேயே பார்க்க விரும்புகிறார்கள். இதில் ஆரஞ்சு நிறத்திற்கான தர்க்கம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிற மாற்றத்தை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், கல்வி மற்றும் வரலாற்றைத் தொடர்ந்து தற்போது விளையாட்டுத் துறையிலும் ‘காவிமயமாக்கல்’ நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்தப் போக்கு நாளை ராணுவ சீருடை வரை நீளக்கூடும் என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
புதிய ஜெர்சியின் வடிவமைப்பும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜெர்சியின் மையப்பகுதியில் மண்டலா (Mandala) கலை வடிவம் இடம்பெற்றுள்ளது. அதனுடன் அசோக சக்கரத்தை நினைவூட்டும் கடற்படை நீல நிற வடிவங்களும், சுதர்சன சக்கர வடிவமைப்பும் இணைக்கப்பட்டுள்ளன.
தோள்பட்டைகளில் தேசியக் கொடியின் மூவண்ணக் கோடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்திய ஹாக்கியின் முக்கிய ஆதரவாளரான ஒடிசா அரசுக்கு மரியாதை செலுத்தும் வகையில் “Think India, Think Odisha” என்ற வாசகமும் ஜெர்சியில் அச்சிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் மிகப்பெரிய திருப்பமாக, ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே அளித்த விளக்கம் அமைந்துள்ளது. “இந்த ஜெர்சி நிற மாற்றம் குறித்து முடிவு எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வரை எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
இதனால், ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் திர்கே மற்றும் பொதுச் செயலாளர் போலாநாத் சிங் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹாக்கி இந்தியா தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், “வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் ஆலோசனையின் பேரில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தது.
ஆனால், பல முன்னணி வீரர்கள், இந்த ஜெர்சி மாற்றம் குறித்து தங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்று கூறியிருப்பது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும், புதிய காவி நிற ஜெர்சி, சர்வதேச ஹாக்கியில் நெதர்லாந்து அணியின் பாரம்பரிய ஆரஞ்சு நிற சீருடையை ஒத்திருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆரஞ்சு நிற மாற்று ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அது நெதர்லாந்து அணியின் சீருடையைப் போன்றே இருப்பதாகக் கூறி வீரர்கள் அதனை அணிய விரும்பாத சம்பவம் தற்போது மீண்டும் நினைவுகூரப்படுகிறது.

ஹாக்கி இந்தியா கூறும் தொழில்நுட்பக் காரணத்தையும் விளையாட்டு விமர்சகர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். பச்சை நிற ஜெர்சியையே அணிந்து, பச்சை நிற செயற்கை புல்வெளியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளதை அவர்கள் எடுத்துக்காட்டாக முன்வைத்து, “நிறம் மைதானத்துடன் ஒன்றிவிடுகிறது” என்ற காரணம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிடுகின்றனர்.
இந்திய ஹாக்கியின் நீண்டகால ஆதரவாளரும், ஒடிசாவில் ஹாக்கி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒடிசாவில் தற்போது ஆட்சியில் உள்ள புதிய பாஜக அரசு, விளையாட்டு என்ற தேசிய அடையாளத்திற்குள் அரசியல் நிறத்தைப் புகுத்த முயற்சிக்கிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
விளையாட்டு சார்ந்த தொழில்நுட்ப காரணங்கள் ஒருபுறமும், பாரம்பரியம் மற்றும் அரசியல் சார்ந்த விமர்சனங்கள் மறுபுறமும் நிலவி வரும் நிலையில், இந்த விவகாரம் நாடு முழுவதும் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதற்கிடையில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் தொடங்கவுள்ள எப்.ஐ.எச். உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு முன்பாக, இந்த புதிய ஜெர்சி நிறத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
