திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் “வாஷிங் மெஷின்” அரசியலை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து இந்த விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்ததை விமர்சித்து கனிமொழி எம்பி தனது பதிவில், “வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற ‘வாஷிங் மெஷின்’ ஒன்று தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இந்தப் புதிய தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் முன்னாள் அதிமுக அமைச்சர்களை தவெக தனது கட்சியில் இணைத்துக் கொண்டிருப்பதால், அந்தக் கட்சி முன்வைக்கும் “ஊழலற்ற அரசியல்” என்ற கொள்கை கேள்விக்குறியாகியுள்ளது என்ற வகையில் அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், மகாபலிபுரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கட்சியில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் நிர்வாகிகள் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் வளர்மதி ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
இவர்களுடன், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களும் தவெகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு மாறி வருவது, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தவெகவின் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அதன் அரசியல் நகர்வுகளை நோக்கி திமுக தனது விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் “அடுத்தது என்ன?”, “7 எம்எல்ஏக்கள் தவெகவில்” உள்ளிட்ட தலைப்புகளில் கனிமொழியின் எக்ஸ் பதிவு மற்றும் அரசியல் கட்சித் தாவல்கள் தீவிரமான விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
