இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தின் வெற்றி விழா, 2026 ஜூன் 19-ஆம் தேதி நடைபெற்றது.
இதில் இயக்குநர் லெனின் பாரதி கலந்து கொண்டு தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களின் சித்தரிப்பு குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், “ஆடிவெள்ளி முதல் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் வரை, ஒரு குறிப்பிட்ட மதத்தையோ அல்லது அந்த மதத்துடன் தொடர்புடைய மூடநம்பிக்கைகளையோ மையமாகக் கொண்டு பல படங்கள் உருவாக்கப்படுகின்றன.
அந்தப் படங்களுக்கு பெரிய தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் ஆதரவாக நிற்கிறார்கள். ஆனால், இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு ஒரு படம் உருவாகும்போது, அதே அளவிலான ஆதரவு கிடைப்பதில்லை.
இயக்குநர் மீரா கதிரவன், இஸ்லாமியர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ‘ஹபீபி’ படத்தைத் தொடங்கியபோது, பல தொழில்நுட்பக் கலைஞர்களும், திரைப்படத் துறையினரும் அந்த முயற்சியை நிராகரித்தனர். இருப்பினும், இந்தப் படத்திற்கு துணைநின்ற அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.
தமிழ் சினிமாவில் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் போன்ற முக்கிய ஆளுமைகள் தங்களது சில படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பது பொதுப் புத்தியில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
குறிப்பாக ‘விஸ்வரூபம்’ போன்ற படங்கள், ‘தி கேரளா ஸ்டோரி’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘துரந்தர்’ போன்ற படங்களுக்கான அடித்தளமாக அமைந்துள்ளன.
இஸ்லாமியர்களின் உண்மையான வாழ்வியலையும், அவர்களது குடும்ப உறவுகளையும் திரையில் காட்டாமல், அவர்களை வட்டிக்குக் கொடுப்பவர்களாகவோ, கறிக்கடைக்காரர்களாகவோ அல்லது பயங்கரவாதிகளாகவோ மட்டுமே தமிழ் சினிமா காலம் காலமாக சித்தரித்து வந்துள்ளது. இது சமூகத்தில் ஒரு தவறான பார்வையை உருவாக்கியுள்ளது.
இதற்கு மாறாக, ‘ஹபீபி’ திரைப்படம் இஸ்லாமியர்களின் எதார்த்தமான வாழ்க்கை முறையையும், அவர்களது பண்பாட்டையும் ஒரு நாவலைப் போலவும், கவிதையைப் போலவும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது. இந்தப் படம், ஒரு சமூகத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது.
வெறுப்பு அரசியலுக்கு வழிவகுக்கும் இத்தகைய சித்தரிப்புகளையும் அணுகுமுறைகளையும் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று இயக்குநர் லெனின் பாரதி பேசினார்.
