மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனை முடிவுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த மகன் ராகா தனது மகன்தான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், குழந்தையின் நலம், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக வாழ்நாள் முழுவதும் முழுப் பொறுப்புடன் துணை நிற்பதாக அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தனித்தனியாக அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். நீண்ட நாட்களாக நீதிமன்றம் மற்றும் மகளிர் ஆணையம் வரை சென்ற இந்த சர்ச்சைக்கு, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் மூலம் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜாய் கிரிசில்டா அளித்த மனுவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை அறிக்கையில், ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருப்பதாவது:

“கடந்த ஆறு மாதங்களாக எனது மகன் ராகா ரங்கராஜுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் முழுப் பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன். இனி வரும் காலங்களிலும் ராகாவின் நலம், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாகவும், முழுப் பொறுப்புடனும் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையுடன், தனது மகன் ராகாவை அரவணைத்தபடி இருக்கும் புகைப்படத்தையும் மாதம்பட்டி ரங்கராஜ் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தை ஜாய் கிரிசில்டாவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “Father and Son” (தந்தையும் மகனும்) என்ற நெகிழ்ச்சியான வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா தொடர்பான இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், குழந்தைக்கு தந்தை ரங்கராஜ்தான் என்றும் ஜாய் கிரிசில்டா சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் நீண்ட நாட்களாக நீதிமன்றம், மகளிர் ஆணையம் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்குள்ளான இந்த வழக்குக்கு அதிகாரப்பூர்வமாக முடிவு கிடைத்துள்ளது. மேலும், தனது மகன் ராகாவின் வாழ்க்கை, நலன் மற்றும் எதிர்காலத்திற்காக முழுப் பொறுப்பேற்று வாழ்நாள் முழுவதும் துணை நிற்பதாக மாதம்பட்டி ரங்கராஜ் அறிவித்திருப்பது இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
