வறுமை, வயோதிகம் மற்றும் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால், தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும் இயக்குநருமான மோகன் சர்மா, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நந்தியம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
பல மொழித் திரைப்படங்களில் நடித்து, மாநில விருதுகளை வென்ற படங்களை இயக்கி, தென்னிந்தியத் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த கலைஞர் இன்று மருத்துவச் செலவுக்குக் கூட பணமின்றி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது திரையுலகினரையும் ரசிகர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அருகே கும்மிடிப்பூண்டி அடுத்த நந்தியம்பாக்கத்தில், ஜெயின் சமூகத்தினரால் நடத்தப்படும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தற்போது மோகன் சர்மா வசித்து வருகிறார். அந்த இல்லத்தில் தங்குவதற்கும், உணவிற்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இருப்பினும், வயது முதிர்வால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்குத் தேவையான மருத்துவச் செலவுகள் மற்றும் தினசரி மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்குக் கூட தன்னிடம் போதிய பணம் இல்லை என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மோகன் சர்மா, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான புனே திரைப்படக் கல்லூரியில் (FTII) நடிப்பு பயின்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குநராகவும் பல படைப்புகளை வழங்கியுள்ள அவர், இயக்கிய திரைப்படங்களுக்காக தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளின் மாநிலத் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
மேலும், தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் (Film Chamber) தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவர், பிரபல நடிகை லட்சுமியின் முன்னாள் கணவரும் ஆவார்.

மோகன் சர்மாவின் தற்போதைய நிலை குறித்து தகவல் அறிந்த நடிகர் ரஜினிகாந்த், மனிதநேய அடிப்படையில் முதற்கட்டமாக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அவரது இந்த செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் உருக்கமாகப் பேசிய மோகன் சர்மா, “20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். திரைப்படங்களை இயக்கியுள்ளேன். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்துள்ளேன். வாழ்க்கையில் பல உயரங்களை கண்ட நான், இன்று கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் செயல்படும் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறேன்.
எனக்கு வேறு வழியில்லை. மருத்துவச் செலவுகளுக்கும், மாத்திரைகள் வாங்குவதற்குக் கூட என்னிடம் பணம் இல்லாத நிலை ஏற்பட்டதால் இங்கு வந்து தங்கியுள்ளேன். இந்த இல்லத்தில் உணவும் தங்குமிடமும் இலவசமாகக் கிடைப்பதால் என் வாழ்க்கையைத் தொடர முடிகிறது” என்று கண்கலங்கினார்.
மேலும், தேசிய விருது பெற்ற தனது ‘நம்ம கிராமம்’ திரைப்படத்தின் செயற்கைக்கோள் (Satellite) ஒளிபரப்பு உரிமையை யாராவது வாங்கினால், அதில் கிடைக்கும் வருமானம் தனது மருத்துவச் செலவுகளுக்கும், அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அரசோ, திரையுலகினரோ அல்லது நல்ல உள்ளங்களோ உதவ முன்வந்தால், தனது எஞ்சிய வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நலிவடைந்த கலைஞர்களுக்காக வழங்கப்படும் நிதியுதவி தொடர்பாகவும் அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைய விதிமுறையின்படி, அந்த உதவித் தொகை கலைஞர்கள் உயிருடன் இருக்கும் போது அல்லாமல், அவர்கள் உயிரிழந்த பிறகே வழங்கப்படும் எனத் தகவல் கிடைத்ததாகக் கூறிய அவர், “ஒரு கலைஞர் உயிருடன் இருந்து கஷ்டப்படும்போது உதவாமல், அவர் இறந்த பிறகு அந்தப் பணத்தை யாரிடம் கொடுக்கப் போகிறார்கள்?” என்று நெகிழ்ச்சியுடன் கேள்வி எழுப்பினார்.
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தபோது, ரோட்டரி கிளப்பில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்கள் மற்றும் சில நல்ல உள்ளங்களின் உதவியால்தான் இந்த முதியோர் இல்லத்திற்கு வர முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 80 வயதைக் கடந்துள்ள மோகன் சர்மா, பாதுகாப்பான சூழலில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தாலும், எதிர்காலத்தில் தனது உடல்நிலை மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கவலை தினமும் தன்னை வாட்டுவதாகவும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
ஒருகாலத்தில் பல மொழித் திரைப்படங்களில் நடித்து, விருதுகள் வென்று, திரைப்படத் துறையின் முக்கிய பொறுப்புகளை வகித்த ஒரு மூத்த கலைஞர் இன்று மருத்துவச் செலவுக்குக் கூட பணமின்றி முதியோர் இல்லத்தில் வாழும் நிலை, திரையுலகினரையும், ரசிகர்களையும் மட்டுமல்லாமல், சமூகத்தையும் ஆழ்ந்த சிந்தனைக்குள்ளாக்கியுள்ளது.
