https://republictn.com/

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, நடப்பு கல்வியாண்டிலேயே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கல்வியை கட்டாயமாக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

2026 ஏப்ரல் மாதத்தில், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அவற்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள இது உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் தானும் ஒருவராக இருந்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆனால், 2026 ஏப்ரலில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஒன்பதாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2029–2030 கல்வியாண்டிலிருந்து மட்டுமே மும்மொழித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மே 15ஆம் தேதி சிபிஎஸ்இ அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பிய புதிய சுற்றறிக்கையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டிலிருந்தே மூன்றாவது மொழியை கற்க கட்டாயமாக்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் முந்தைய அறிவிப்பை சிபிஎஸ்இ மீறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஆறாம் வகுப்பிலேயே மாணவர்கள் தங்களது விருப்ப மொழியை தேர்வு செய்துள்ள நிலையில், திடீரென புதிய மொழியை கற்க வேண்டிய சூழல் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜூலை 1 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் நிலையில், குறுகிய காலத்தில் புதிய மொழியை கற்றுக்கொள்ள மாணவர்களை கட்டாயப்படுத்துவது தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்த கல்வித் திறனையும் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், முன்பே அறிவித்தபடி 2029–2030 கல்வியாண்டிலிருந்து மட்டுமே மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 minutes ago at 16 minutes ago