Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியல் களம் தற்போது அரசு பங்களாக்களைச் சுற்றியே பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் அரியணை ஏறியுள்ள நிலையில், புதிய அமைச்சர்களுக்கான அரசு இல்லங்களை ஒதுக்குவதில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்த பல முன்னாள் அமைச்சர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாமல் தங்களின் வசம் வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. புதிய அரசு பதவியேற்ற பின்னரும் அவர்கள் வீடுகளை ஒப்படைக்கத் தயங்குவதால், தற்போதைய தவெக அமைச்சர்கள் தங்குவதற்கு முறையான இடமில்லாமல் தவித்து வருகிறார்கள்.

இதன் காரணமாக, பல புதிய அமைச்சர்கள் தற்காலிகமாக அரசின் விருந்தினர் மாளிகையிலேயே தங்கி தங்களது அன்றாட அரசுப் பணிகளைக் கவனித்து வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மிக விரைவில் தொடங்கவுள்ள சூழலில், அதற்கு முன்பாக புதிய அமைச்சர்கள் அனைவருக்கும் அரசு இல்லங்கள் முறைப்படி ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் தீவிரமாக இருக்கிறார்.

இதையும் படியுங்க  "110 விதியில் அறிவிச்சதுக்கே ஒரே வாரத்துல அரசாணையா? கோட்டை வரலாற்றிலேயே 'விசித்திர' வேகம்! 2010 திரும்பும் பயமா?"

இவ்விவகாரத்தில் மெத்தனம் காட்டக் கூடாது என அதிகாரிகளிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ள முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து, பொதுப்பணித்துறைக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. “முன்னாள் அமைச்சர்களிடம் பேசி உடனடியாக வீடுகளைக் காலி செய்ய நடவடிக்கை எடுங்கள்” என அழுத்தமான உத்தரவு வர, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது மாஜி அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு பங்களாக்களை ஒப்படைக்குமாறு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, தற்போதைய அமைச்சரவையில் முக்கியப் புள்ளியாகப் பார்க்கப்படும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வசம் இருந்த இடங்களைக் குறிவைத்து களம் இறங்கியிருப்பது தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதே அறையில் தான் தற்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அமர்ந்து கோப்புகளைக் கவனித்து வருகிறார். கோட்டை அறையைத் தொடர்ந்து, தற்போது உதயநிதி வசித்து வந்த விஐபி அரசு பங்களாவையும் தனக்கே ஒதுக்க வேண்டும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுமட்டுமன்றி, தனது இந்த கோரிக்கையை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கும் ஆதவ் அர்ஜுனா நேரடியாகக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படியுங்க  "ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவங்க எல்லாம்..." - மைக் பிடித்து தாராபுரம் திமுக வேட்பாளர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!

மறுபுறம், திமுக தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளதால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு முறைப்படி அரசு பங்களா வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், தான் இதுவரை வசித்து வந்த ‘குறிஞ்சி’ இல்லத்தையே மீண்டும் தனக்கு ஒதுக்க வேண்டும் எனத் தன்னை அணுகிய அதிகாரிகளிடம் உதயநிதி ஸ்டாலின் பிடிவாதமாகக் கேட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் உதயநிதிக்காக குறிஞ்சி இல்லம் மட்டுமன்றி, அதன் அருகில் இருந்த மற்றொரு பங்களாவும் சேர்த்து இரண்டு இல்லங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவர் இரண்டையுமே இணைத்துப் பயன்படுத்தி வந்தார். இப்போது எழுந்துள்ள இந்த சிக்கலுக்குத் தீர்வு காணப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு இரண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். உதயநிதி பயன்படுத்தி வந்த இரண்டு பங்களாக்களையும் முழுமையாக அரசே திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் அவருக்கு வேறொரு புதிய பங்களாவைத் தருவது.

அவர் பயன்படுத்தி வந்த இரண்டு பங்களாக்களில் ஒன்றை மட்டும் அரசு திரும்பப் பெற்றுக்கொண்டு, அவர் விரும்பிக் கேட்கும் ‘குறிஞ்சி’ இல்லத்தை மட்டும் அவருக்கே மீண்டும் வழங்குவது.

இதையும் படியுங்க  கனிமொழி வெளியிடும் அந்த வீடியோ..! உதயநிதியின் சோலியை மொத்தமாய் முடிக்க அஸ்திரம்..! அதிரும் அறிவாலயம்..!

பட்ஜெட் கூட்டத்தொடர் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் அமைச்சர்களின் பிடிவாதம் ஒருபுறம், புதிய அமைச்சர்களின் எதிர்பார்ப்பு மறுபுறம் என அரசு பங்களா விவகாரம் கோட்டையில் பெரும் மல்லுக்கட்டாக மாறியுள்ளது. முதல்வர் விஜய் இதில் என்ன இறுதி முடிவு எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago