Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே, துப்பாக்கி மற்றும் போலி பிரதமர் அலுவலகமான PMO அடையாள அட்டையுடன் நுழைய முயன்றதாக 24 வயது இளைஞர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கும் பிரதமரின் வருகைக்கும் அல்லது அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று மும்பை போலீஸார் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் எனப்படும் BKC பகுதியில் உள்ள நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில், செப்டம்பர் 8-ஆம் தேதி ‘குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2026’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்தார். இந்த நிலையில், நிகழ்ச்சிக்கு முந்தைய நாளான செப்டம்பர் 7-ஆம் தேதி மாலை, BKC பகுதியில் உள்ள பிரபல சொகுசு மாலான ஜியோ வேர்ல்ட் பிளாசாவுக்குள் சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் நுழைய முயன்றுள்ளனர்.

அப்போது 24 வயதான ரோஹன் பரேக் என்பவர் தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என அடையாளப்படுத்திக் கொண்டு மாலுக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. அவருடன் துப்பாக்கி ஏந்திய அவரது மெய்க்காப்பாளர் திலீப் குண்டேவும் இருந்துள்ளார். மாலின் பாதுகாப்புப் பணியாளர்கள் இருவரையும் சோதனையிட்டபோது, ரோஹன் பரேக்கிடம் இருந்தது போலியான PMO அடையாள அட்டை என்பதும், அவரது மெய்க்காப்பாளரிடம் துப்பாக்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மாலின் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புப் பணியாளர்களை மீறி பலவந்தமாக உள்ளே நுழைய முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மால் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். முதலில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கில் மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்க  "பாஜக கூட்டணியில் இணையும் திமுக..? 3/2- புது ஸ்கெட்ச்..! கனிமொழியை வைத்து பாஜக-வின் மாஸ்டர் பிளான்..!

விசாரணையில், ரோஹன் பரேக்குடன் வந்த மெய்க்காப்பாளர் திலீப் குண்டே தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறியதாக முதலில் தகவல் வெளியானது. அவரிடமும் போலீஸார் விரிவான வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மெய்க்காப்பாளரிடம் இருந்த துப்பாக்கி உரிமம் பெற்ற ஆயுதம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், ஆரம்பகட்ட விசாரணையில் பிரதமரின் பாதுகாப்புக்கோ அல்லது அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிக்கோ அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் அங்கு வந்ததாகத் தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போலி அடையாள அட்டை மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்தி சொகுசு மாலில் தங்களது கெத்தைக் காட்டுவதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கத்துடனோ அத்துமீறி நுழைய முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், பிரதமர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி நடைபெறும் உயர் பாதுகாப்பு வளையத்திற்கு மிக அருகில் துப்பாக்கியுடன் ஒருவர் போலி அரசு அடையாள அட்டையைப் பயன்படுத்தி நுழைய முயன்றதால், இந்த விவகாரத்தை போலீஸார் தீவிரமாக எடுத்துள்ளனர்.

கைதானவர்களின் பின்னணி, அவர்களது தொடர்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீஸார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது மொபைல் போன்கள் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கில் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் BKC காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறவிருந்த பாதுகாப்பு வளையத்திற்கு மிக அருகில் சம்பவம் நடந்ததால், வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு விசாரணை மும்பை குற்றப்பிரிவு போலீஸாரின் நேரடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நீதிமன்ற விசாரணையின்போது ரோஹன் பரேக் விவகாரத்தில் மேலும் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோஹன் பரேக் பிரதமரின் பாதுகாப்பு வளையத்தை உடைக்கவோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ அங்கு செல்லவில்லை என்றும், தனது மெய்க்காப்பாளர் திலீப் குண்டேவுடன் ஜியோ வேர்ல்ட் பிளாசாவுக்குள் ஒரு விலை உயர்ந்த சென்ட் பாட்டில் வாங்குவதற்காகவே சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  'இந்தி-சீனி பாய் பாய்' வெறும் ஏமாற்று வேலை… அருணாச்சலில் அடித்து ஆடும் சீனா..! அடுத்த துரோகம் அம்பலம்!

ஆனால், மாலின் பாதுகாப்புச் சோதனையின்போது மெய்க்காப்பாளரிடம் துப்பாக்கி இருப்பது தெரியவந்ததால், தனது செல்வாக்கைக் காட்டுவதற்காக ரோஹன் பரேக் போலியான PMO அடையாள அட்டையை எடுத்துக் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ரோஹன் பரேக், லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற நன்கு படித்த இளைஞர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரோஹன் பரேக்கின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம் வழக்கில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோஹன் திட்டமிட்டு ஆள்மாறாட்டம் செய்யவில்லை என்றும், அவரே ஒரு பெரிய மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாந்துள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

தருண் கபூர் மற்றும் தருண் குப்தா என்ற இருவர் ரோஹன் பரேக்கைத் தொடர்புகொண்டு, பிரதமர் அலுவலகத்தில் அவருக்கு ‘ஆலோசகர்’ பணியிடம் கிடைத்துள்ளதாகக் கூறி ஏமாற்றியதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முறையான பணி நியமனக் கடிதம், அடையாள அட்டை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் போலி கையொப்பம் இடம்பெற்ற கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை அந்தக் கும்பல் ரோஹனிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘பாதுகாப்பு கொள்முதல் கொள்கை’ எனப்படும் Defence Acquisition Policy தொடர்பான போலி மின்னஞ்சல்களும் அவருக்கு அனுப்பப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்களை உண்மை என நம்பிய ரோஹன் பரேக், கடந்த சில ஆண்டுகளாகவே தான் ஒரு உண்மையான PMO அதிகாரி என்ற எண்ணத்தில் வலம் வந்ததாக அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  “முன்னாள் CM-க்கு நெருக்கடி! பினராய் விஜயன் தொடர்புடைய இடங்களில் ED சோதனை!”

எனினும், இந்த வாதம் உண்மையா அல்லது போலீஸ் காவலில் இருந்து தப்பிப்பதற்காகக் கூறப்படும் காரணமா என்பது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ரோஹன் பரேக்கிற்கு போலி அரசு அடையாள அட்டைகள், பிரதமரின் கையொப்பம் இடம்பெற்றதாகக் கூறப்படும் போலி கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரித்து வழங்கியதாகக் கூறப்படும் அந்தப் பின்னணி மோசடி கும்பல் யார் என்பதைக் கண்டறிவது போலீஸாரின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இதற்காக ரோஹன் பரேக்கின் மொபைல் போன் மற்றும் மின்னஞ்சல்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருக்கு ஆவணங்களை வழங்கியவர்கள் மற்றும் அந்த ஆவணங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய மோசடி கும்பல் செயல்பட்டுள்ளதா என்பதையும் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

மும்பை போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தச் சம்பவம் செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற தனிப்பட்ட அத்துமீறல் சம்பவமே தவிர, செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெற்ற பிரதமரின் நிகழ்ச்சிக்கோ அல்லது அவரது பாதுகாப்புக்கோ எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ரோஹன் பரேக் உண்மையிலேயே மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டாரா, அல்லது போலி அடையாள அட்டையை தெரிந்தே பயன்படுத்தினாரா, அவருக்கு போலி ஆவணங்களை வழங்கியவர்கள் யார், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் பணியில் மும்பை குற்றப்பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றம் ரோஹன் பரேக்கை செப்டம்பர் 11-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago