Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆன்லைன் டெண்டர் நடைமுறை ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு அரசு டெண்டர் வெறும் 6 மணி நேரத்தில் முடிவடைவதா?” என்ற கேள்வியை எழுப்பி, நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மின் கொள்முதல் இணையதளமான ‘டெண்டர்ஸ் தமிழ்நாடு’ வெளியிட்டுள்ள தகவல்களின் படி, காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோனேரிக்குப்பம் ஊராட்சியின் காரப்பேட்டை கிராமத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.16.83 லட்சம் மதிப்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வெளியிடப்பட்ட இந்த டெண்டர், மே 19ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டதாகவும், அதே நாளில் மதியம் 3 மணிக்கே டெண்டர் முடிவடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டெண்டர் திறக்கும் நேரம் மாலை 4 மணி என இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  திமுக-வை கைகழுவும் ஓ.பி.எஸ்..! தவெக-வில் இணையும் தர்ம யுத்தம்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!

அதாவது, காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்ட அரசு டெண்டர், வெறும் 6 மணி நேர இடைவெளிக்குள் முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, “ஒரு குறிப்பிட்ட நபருக்கே ஒப்பந்தம் வழங்கும் நோக்கத்தில்தான் இத்தகைய அவசர நடைமுறை பின்பற்றப்பட்டதா?” என்ற சந்தேகத்தையும் சமூக வலைதளங்களில் பலர் எழுப்பி வருகின்றனர்.

அரசு விதிமுறைகளின் படி, லட்சக்கணக்கில் மதிப்பிடப்படும் பொதுப்பணிகளுக்கான டெண்டர்களில் ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 15 முதல் 30 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட வேண்டும். பேரிடர் காலங்கள் அல்லது மிக அவசரமான பணிகளில் மட்டுமே இதற்கு தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன.

ஆனால், தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த குடிநீர் தொட்டி அமைக்கும் பணிக்கான டெண்டருக்கு வெறும் 6 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டிருப்பது விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும், இது டெண்டர் முறைகேட்டிற்கு வழிவகுக்கும் என்றும் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.

மேலும், இதேபோன்ற மற்றொரு டெண்டரும் மே 22ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி, அதே நாளில் மதியம் 3 மணிக்கே முடிவடையும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க  கட்சி ஆரம்பிக்கல.. ஆனா அதுக்கும் மேல! அண்ணாமலையின் 6 மாத மாஸ்டர் பிளான்!

அவசர கால பணிகளுக்காக அரசு இத்தகைய அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்றாலும், ஆன்லைன் ஈ-டெண்டர்களை இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் நடத்துவது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதியதாக பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசுக்கு இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆனந்த் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago