https://republictn.com/

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நாளை ஒரு நாள் முழுமையான கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

மாநில அளவிலான இந்த கடையடைப்பு போராட்டத்தையடுத்து, அவசர மருந்து சேவையை உறுதிப்படுத்த தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு மருந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. அவசர மருந்து சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர தேவைக்கான மருந்து சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்தின் உதவி இயக்குனர்கள் தலைமையில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள், முதியவர்கள், இணைநோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் உள்ளிட்டோர் அவசர மருந்து தேவையுள்ள நிலையில், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு இயக்க உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு மருந்துகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் மருந்து வணிகர் சங்கங்கள், அவசர மருந்து சேவைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவசர தேவைக்கு மாவட்ட மருந்து ஆய்வாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago