தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு, ஆளுங்கட்சிக்கும் இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் இடையேயான நிழல் யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், “ஆறு மாதங்களுக்கு த.வெ.க அரசை விமர்சிக்க மாட்டேன்” என்று கூறிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “மூன்று மாதங்கள் கூட இந்த ஆட்சி தாங்காது” எனப் பேசியுள்ளார். அதேபோல அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், “இரண்டு இரவல் கால்களும் நகர்ந்தால் நாற்காலி தானாகச் சாயும்” எனப் பொடி வைத்துப் பேசியுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே கருத்தை முன்வைக்கும் இந்த அரிய நிகழ்வின் பின்னணியில் உள்ள அதிரடி அரசியல் ரகசியங்கள் வெளியாகி உள்ளன.
திராவிடக் கட்சிகளின் தீராத ‘ஈகோ’
திரைத்துறையில் இருந்து வந்து, கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே விஜய் ஆட்சியைப் பிடித்ததை தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் தலைமைகளாலும் ஜீரணிக்க முடியவில்லை நாம் ‘அரசியல் எதிரி’ என்று கூட மதிக்காத ஒருவர் முதல்வராகிவிட்டாரே என்ற ஈகோ ஒருபுறமிருக்க, இந்த த.வெ.க ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால், இரு திராவிடக் கட்சிகளின் எதிர்காலமே அஸ்தமனமாகிவிடும் என்ற அச்சம் அவர்களுக்குள் எழுந்துள்ளது.
ரகசியப் பேச்சுவார்த்தைகள்
தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, விஜய்யை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதற்கான ரகசிய நகர்வுகளை இரு கட்சிகளும் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க தரப்பில், தி.மு.க-விடம் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டதாம். அதன்படி, “சீனியாரிட்டி அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி முதல்வர், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் என இணைந்து ஆட்சி அமைப்போம்” எனப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த இக்கட்டான சூழலில் தான், கூட்டணிக் கட்சிக்கு ஒரு சீட் கூடுதலாகத் தர மறுத்த தி.மு.க, திருமாவளவனை முதல்வராக்கும் வியூகங்களைக்கூட யோசித்தது. இத்தகைய ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்ததை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா, திருமாவளவன், வைகோ உள்ளிட்ட பல தலைவர்களின் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
‘ஸ்வீட் பாக்ஸ்’ டீல் – 10 எம்.எல்.ஏ-க்களுக்குக் குறி?
தற்போது த.வெ.க அரசிடம் 107 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். சொற்பமான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நடக்கும் இந்த மைனாரிட்டி அரசில் இருந்து, குறைந்தது 10 எம்.எல்.ஏ-க்களைத் தூக்கிவிட்டால் அல்லது அவர்களை ராஜினாமா செய்ய வைத்தால் ஆட்சியை எளிதாகக் கவிழ்த்துவிடலாம் என இரு திராவிடக் கட்சிகளும் கணக்குப் போடுகின்றன.
இதற்காகப் பெருமளவில் ‘ஸ்வீட் பாக்ஸ்’ செலவு செய்யவும், தொழிலதிபர்கள் மூலம் பொருளாதாரக் கவனிப்புகளைச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. த.வெ.க கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு டெல்லி பா.ஜ.க மேலிடமும் ‘கிரீன் சிக்னல்’ கொடுக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.
யாரெல்லாம் டார்கெட்?
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களை வளைக்க சில பிரத்யேக ஃபார்முலாக்களைத் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தரப்பு கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரசிகர் மன்றக் காலம் தொட்டு விஜய்யுடன் பயணித்தும், தற்போது அமைச்சரவையில் பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் மனவருத்தத்தில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள். மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால் புழுக்கத்தில் இருக்கும் த.வெ.க எம்.எல்.ஏ-க்கள்.
எளிய பின்னணி கொண்ட மற்றும் பணத்தேவை இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் என இவர்களிடம் நாசுக்காகப் பேசி, “நீங்கள் 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் கிடைக்காத லைஃப்-டைம் செட்டில்மென்ட்டை நாங்கள் தருகிறோம்; பதவியை மட்டும் ராஜினாமா செய்யுங்கள்” எனப் பிரம்மாண்ட ‘டீல்’ பேசப்பட்டு வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.
அடுத்தகட்ட மாஸ்டர் பிளான்
இந்தத் திட்டம் ஓரளவுக்குக் கைகூடினால், த.வெ.க தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளையும் வளைத்து, பொதுவெளியில் “த.வெ.க அரசு சரியில்லை” என்று பேச வைப்பதுதான் இவர்களின் திட்டம். அதன் மூலம், முன்பு டி.டி.வி.தினகரன் தரப்பு அ.தி.மு.க அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது போல, த.வெ.க எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு அரசுக்கு எதிரான சூழலை உருவாக்குவதே இவர்களின் இறுதி வியூகம்.
கட்சிகளின் அதிகாரப்பூர்வ மறுப்பு
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரத்திடம் கேட்டபோது, “தனி மெஜாரிட்டி இல்லாத ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என்றுதான் எங்கள் பொதுச்செயலாளர் கூறினார். இதற்கும் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவிற்கும் தொடர்பில்லை. இது வெறும் வதந்தி” என மறுத்துள்ளார்.
அதேபோல, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “இப்படிப் பின்புற வழியாக ஆட்சியைப் பிடிக்கும் அவசியம் எங்களுக்குக் கிடையாது; இத்தகைய வேலைகளில் தி.மு.க எந்தக் காலத்திலும் ஈடுபட்டதில்லை” என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய ஆடுபுலி ஆட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.
