https://republictn.com/

தமிழகத்தில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியும் உட்கட்சிப் பூசலும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

“ஆட்சிக்கு வந்தவுடன் உழைத்தவர்களை மறந்துவிட்டு, மாற்றுக்கட்சி மாஜிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள்” எனத் த.வெ.க நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

பண பலம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை?
தேர்தல் தொடங்கும்போதே “குறைந்தது 5 கோடி ரூபாய் செலவு செய்யக்கூடிய தகுதி உள்ளவர்களுக்கே சீட்” என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதால், பொருளாதார ரீதியாகப் பலமில்லாத 60-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. வாய்ப்புப் பெற்ற பலரும் கடன் வாங்கித்தான் தேர்தல் செலவுகளைச் செய்துள்ளனர். ஆனால், தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், கடனில் தவிக்கும் தங்களைச் சந்திக்கவோ, மனம் விட்டுப் பேசவோ தலைமை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட கூட்டவில்லை என தென்மாவட்டச் செயலாளர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

உழைத்தவர்களுக்கு ஏமாற்றம்; மாஜிகளுக்கு மகுடம்!
“மேடைக்கு மேடை போஸ்டர் ஒட்டியவனுக்குத்தான் மதிப்பு எனத் தலைமை பேசுகிறது. ஆனால், எங்களால் அமைச்சர்களைக்கூடச் சந்திக்க முடிவதில்லை” என நிர்வாகிகள் புலம்புகின்றனர். அமைச்சர்களைச் சந்திக்கச் சென்றால், “கட்சி விவகாரம் என்றால் பனையூர் அலுவலகத்தில் பேசிக் கொள்ளலாம்” என மழுப்புகிறார்கள்.

அதேநேரம், தேர்தலில் தோல்வியடைந்த பொருளாதார பலம் கொண்ட ‘கு.ப.கிருஷ்ணன்’ போன்றவர்களுக்கு உடனடியாக வீட்டு வசதி வாரியப் பதவி தூக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைவருக்காகத் தெருவில் இறங்கி வேலை செய்த தங்களை வாரியப் பதவிகள் தராமல் அலைக்கழிக்கிறார்கள் என டெல்டா பகுதி மாவட்டச் செயலாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார் .

மாவட்டச் செயலாளர்களுக்கே தெரியாத ‘ரகசிய’ இணைப்புகள்
லஞ்ச ஊழலற்ற தூய ஆட்சியைத் தருவதாகக் கூறும் த.வெ.க-வில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தேர்தலில் த.வெ.க வேட்பாளரை விடக் குறைவான வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் த.வெ.க-வில் இணைகிறார். இந்தத் தகவல் கூட சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளருக்கோ அல்லது தொகுதி நிர்வாகிகளுக்கோ தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், “அவர்களுக்குக் கீழ் வேலை பார்க்க வேண்டிய எங்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?” என்று மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கொந்தளிக்கிறார்கள்.

கட்சிக்குள் பவர் சென்டர்கள்!
கட்சியின் முழு அதிகாரம் முதலமைச்சர் விஜய் ஒருவரிடம் மட்டுமே இருப்பதாக வெளியில் தெரிந்தாலும், உள்ளே ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் என நான்கு முதல் ஐந்து ‘பவர் சென்டர்கள்’ செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

கட்சி அமைப்பை நன்கு தெரிந்த ஆனந்த் அவர்கள், “போஸ்டர் ஒட்டியவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்” என வாய் திறந்தாலே, அரசியல் அனுபவத்தைக் காரணம் காட்டி ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட மற்றவர்கள் அவரது வாயை அடைத்துவிடுகிறார்கள். மேலும், கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தலைமையில் உருவாக்கப்பட்ட 28 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவையும் இந்த பவர் சென்டர்கள் செயல்பட விடாமல் முடக்கி வைத்துள்ளதாகத் தெரிகிறது.

கட்சி நிதியால் குப்பையாகும் நிர்வாகம்
சில மாவட்டங்களில் உள்ளூர் தொழிலதிபர்கள் தங்களின் சுய லாபத்திற்காக, த.வெ.க மாவட்டச் செயலாளர்களைக் கைக்குள் போட ‘கட்சி நிதி’ என்ற பெயரில் பணத்தை வாரி இறைக்கிறார்கள். சில நேர்மையான நிர்வாகிகள் அதை மறுத்தாலும், பல மாவட்டச் செயலாளர்கள் எந்தவித உறுத்தலும் இன்றி அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இந்தத் தவறுகளை விஜய் உடனடியாகக் கவனித்துத் தடுக்காவிட்டால், உள்ளாட்சித் தேர்தலில் கட்சி மிகப்பெரிய சவால்களைச் சந்திக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

தலைமையின் விளக்கம்
இந்த உட்கட்சிப் பூசல்கள் குறித்துத் த.வெ.க-வின் முக்கியத் தலைவர்களிடம் கேட்டபோது, அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பேச மறுத்துவிட்டனர். இருப்பினும், “எல்லாவற்றையும் தலைமை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கட்சியை மறுசீரமைப்பு செய்யப் பெரிய மாற்றங்கள் வரப்போகின்றன. உள்ளாட்சித் தேர்தல் பணிகளும் தொடங்கிவிட்டன. உள்ளூர் நிர்வாகிகளின் வருத்தங்கள் விரைவில் தீர்க்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

“ஆட்சியைக் கைப்பற்றியவுடன் தங்களைக் குப்பையாகக் கசக்கி வீசிவிட்டார்கள்” என்ற அடிமட்ட நிர்வாகிகளின் இந்த ஆதங்கக் குரல் முதலமைச்சர் விஜய்யின் காதுகளுக்கு எட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago