கர்நாடக காங்கிரசுக்குள் இருந்த இழுபறி இன்று முடிவுக்கு வந்தது. முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். நான் லோக்பவனுக்குச் சென்று எனது ராஜினாமாவை சமர்ப்பித்தேன். ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பெங்களூரில் இல்லை, அதனால் நான் எனது ராஜினாமாவை அவரது செயலாளரிடம் சமர்ப்பித்தேன். ஆளுநர் இன்று இரவு திரும்புகிறார்,” என்றார்.
மேலும் சித்தராமையா கூறுகையில், “ஆளுநர் வரும்போது எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன். அரசியலமைப்பின்படி, ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதற்கான நடைமுறையை வகுப்பது அவரது உரிமை. முதலமைச்சர் ராஜினாமா செய்த பிறகு, அதை ஏற்றுக்கொண்டு அடுத்த முதலமைச்சருக்கு வழிவகுப்பது அவரது பொறுப்பு. நான் இதை ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். வெளியிலும் பலமுறை கூறியுள்ளேன். உயர் தலைமை எப்போது உத்தரவிடுகிறதோ, அப்போது நான் ராஜினாமா செய்வேன் என்று கூறியிருந்தேன். உயர் தலைமையின் அறிவுறுத்தல்கள் கிடைத்தவுடன் நான் ராஜினாமா செய்துவிட்டேன்.”
மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கினர். ஆனால் தேசிய அரசியலில் எனக்கு விருப்பமில்லை என்பதால் அதை மறுத்துவிட்டேன். நான் மாநில அரசியலிலேயே நீடிப்பேன். ஏனென்றால் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்ற எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களை எதிர்த்துப் போராடுவேன். என் கடைசி மூச்சு வரை மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவேன். நான் பணத்தைத் தேடவும் இல்லை, சொத்துக்களைக் குவிக்கவும் விரும்பவில்லை. என் அரசியல் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.
எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராகப் பல பொய்க் கதைகளைப் புனைந்தன. நான் அளித்த வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை. கர்நாடக மக்களுக்குச் சேவை செய்ய எனக்கு இரண்டு முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
நான் ராஜினாமா செய்யவிருப்பதாக மேலிடத்திற்குத் தெரிவித்திருந்தேன். அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு புதிய அரசு அமைக்கப்படும். புதிய அரசுக்கு எனது முழு ஆதரவும் உண்டு. புதிய அரசுக்கு முழுமையான பெரும்பான்மை உள்ளது.
நான் 2006-ல் காங்கிரஸில் இணைந்தேன். 2006 முதல் இப்போது வரை, தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் எனக்கு அன்பையும் வாய்ப்புகளையும் வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் முதலில் 2013 முதல் 2018 வரை முதலமைச்சராகப் பணியாற்றினேன். அதன்பிறகு, 2023 முதல் முதலமைச்சராக இருந்து வருகிறேன். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் என்னுடன் பணியாற்றியவர்கள் எனக்கு முழு ஆதரவையும் வழங்கினர்.
நான் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது முதலமைச்சராகவோ ஆவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. நான் தற்செயலாக அரசியலுக்குள் நுழைந்தேன். என் குடும்பத்தில் யாரும் அரசியலில் இருந்ததில்லை. அரசியலில் நுழைந்ததில் இருந்து, புத்தர், பசவர், அம்பேத்கர் மற்றும் காந்திஜியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை நான் நம்பி வருகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அனைவரும் ஒரே குடும்பம் போல இருக்க வேண்டும் என்று நான் நம்பினேன்,” என்று சித்தராமையா கூறினார்.
