சென்னை வேளச்சேரியில் நடைப்பயிற்சிக்கு சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேளச்சேரி நூறுஅடி சாலையில் 61 வயது மூதாட்டி ஒருவர் ரத்தக் காயங்களுடன் இருந்ததை பொதுமக்கள் பார்த்து, உடனடியாக மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில், வேளச்சேரி போலீசார் உடனடி விசாரணை மேற்கொண்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அதிகாலை மூன்று மணியளவில் பிரியாணி கடையில் வேலை செய்தவர் ஒருவர் டீ குடிக்கச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும், அப்போது இரண்டு நபர்கள் அவரை பின்தொடர்ந்து சென்று, அருகிலுள்ள மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரிடம் போலீசாரும் மருத்துவர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
