ஆலங்குளம் அருகே வீராணம் பகுதியில் சட்டவிரோதமாக முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 12 பேரை வனத்துறையினர் அதிரடியாகப் பிடித்தனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பொதுமக்களின் பொழுதுபோக்குக்காகவோ, உணவுக்காகவோ வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், ஆலங்குளம் அருகே அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய வீராணம் பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆலங்குளம் வனச்சரக அலுவலர்கள் தலைமையிலான வனத்துறையினர், தகவல் கிடைத்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, முயல்களை வேட்டையாடும் நோக்கத்துடன் 12 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து கையும் களவுமாகப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கருவந்தா பகுதியைச் சேர்ந்த கண்ணன் (36), தாமஸ் (68), மாரிச்செல்வம் (23), மரியசெல்டன் (19), வீராணம் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் (27), ராஜகோபாலப்பேரியைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் (41), காவேரி செல்வம் (22), கோவிந்தப்பேரியைச் சேர்ந்த தினேஷ் (20), முத்துகிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த பண்டார மணிகண்ட பிரபு (27), அச்சங்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி (50), லிங்கம் (46), மாயமான்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
பிடிபட்ட 12 பேரிடமும் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் முயல் வேட்டைக்காக அப்பகுதிக்கு வந்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் இளையராஜாவின் உத்தரவின்பேரில், முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 12 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி, 12 பேரிடமும் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டவிரோதமானது என்பதால், பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக வேட்டையாடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கும் வகையில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 12 பேர் ஒரே நேரத்தில் வனத்துறையினரிடம் சிக்கி, ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
