இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று செங்கல்பட்டு மதுராந்தகம் தொகுதி. இன்னொன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி. இதில் மதுராந்தகம் தொகுதியிl பாமகவின் சப்போர்ட் இருந்தால் வெற்றி வாய்ப்பு எளிதாகும் என்பது மூன்று கட்சிகளுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
திமுக, தவெக, அதிமுக என மூன்று கட்சிகளுமே பாமகவின் ஆதரவை எதிர்பார்க்கிறார்கள். காரணம் அங்கு வன்னியர் வாக்கு வங்கி கூடுதலாக இருக்கிறது. குறிப்பாக 2016ல் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து நின்ற போதே அங்கு 16,500 வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். சுமார் 9% வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். எனவே அந்த வாக்கு சதவீதம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் கூட அதிமுக அங்கு வெற்றி பெற்றபோது வெறும் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால் தற்போது ஐந்து முனை போட்டி நிலவக்கூடிய காரணத்தால், வெறும் 2000 வாக்குகளாக இருந்தால் கூட அது வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது. எனவே இந்தச் சூழலில் பாமகவின் ஆதரவு அதிமுகவிற்கு கிடைத்தால் அது வெற்றிக்கோட்டை எளிதாக எட்டிப்பிடிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதிமுகவிற்கு ஆதரவு கொடுக்க பாமக தயங்குவதாக தெரிகிறது. காரணம் கடந்த முறை 25 தொகுதிகளை பாமக எதிர்பார்த்த நிலையில் 18 தொகுதிகள் மட்டும்தான் கொடுக்கப்பட்டது. அந்த 18 தொகுதிகளிலும் அதிமுக உண்மையாக உழைக்கவில்லை என்று பாமக தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.
அவர்களுடைய ஒத்துழைப்பு சரியாக இல்லாத காரணத்தால் பாமக வேட்பாளர்கள் உண்மையிலேயே வெற்றி பெற வேண்டும் என உயிரை கொடுத்து உழைத்த வகையில் அதிமுகவினரின் ஒத்துழைப்பு இல்லை என பாமகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருதுகின்றனர். பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அவர்கள் என்னென்ன சிரமங்களை எதிர் எதிர்கொண்டார்கள் என்பதையும் மறக்கவில்லை. இதை அந்த தேர்தல் முடிந்த உடனே நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சின் ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் எதிரொளித்ததாகவும் பாமக தலைவர் அப்போது குறித்துக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
அதேவேளை பாமகவினர் அதிமுக போட்டியிட்ட பல இடங்களில் உண்மையாக உழைத்தார்கள். அவர்களுடைய வெற்றிக்காக பாடுபட்டார்கள். இன்னும் வெளிப்படையாக சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பாமகவின் ஓட்டு அதிமுகவிற்கு முழுமையாக டிரான்ஸ்பர் ஆகி இருக்கிறது. ஆனால் அதிமுகவின் வாக்குகள் பாமகவிற்கு முழுமையாக டிரான்ஸ்பர் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுக வெற்றி பெற்ற 47 தொகுதிகளில் சுமார் 35 தொகுதிகள் வடதமிழகத்தில் உள்ளன.
திருவண்ணாமலை, வேலூர், சேலம், தர்மபுரி இதுபோன்று வடதமிழ்நாட்டில் இருக்கின்றன. இங்குதான் அதிகமாக அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.கொங்கு மண்டலத்தை காட்டிலும் வடதமிழ்நாட்டில் அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் பாமகவின் செல்வாக்கு. பாமகவின் வாக்கு ஓட் டிரான்ஸ்பர். ஆனால் 18 இடங்களில் போட்டியிட்ட பாமக நான்கு இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற்றது. அதிமுக இன்னும் கடுமையாக உழைத்திருந்தால் அவர்களுடைய தொகுதிக்கு எப்படிய எல்லாம் பார்த்து கொண்டார்களோ அதேபோல இங்கும் செலவு செய்து பார்த்துக் கொண்டிருந்தால் இந்த தொகுதிகளில் குறைந்தது ஒரு 10 தொகுதியிலாவது பாமக வெற்றி பெற்றிருக்கும்.

குறைந்தது இன்னொரு நான்கு, ஐந்து தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்கும். நல்ல வாய்ப்பு இருந்த திருப்போரூர், மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். போளூர் தொகுதியில்வெற்றி வாய்ப்பை இழந்தோம் என அவர்கள் பெரிய பட்டியலை வாசிக்கிறார்கள். வெற்றி வாய்ப்பு இருக்கக்கூடிய மேட்டூர் போன்ற தொகுதிகளை எங்களுக்கு கொடுக்கவில்லை. சேலம் மேற்கு போன்ற தொகுதியை எல்லாம் எங்களுக்கு கொடுக்கவில்லை என்றும் புகார்களையும் வாசிக்கின்றனர். எனவே ஒரு திருப்தி இல்லாத நிலையில் நாங்கள் மட்டும் எதற்காக சென்று அவர்களுக்கு உழைக்க வேண்டும்? இந்த இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா? என பாமக யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக தரப்பிலிருந்து தொடர்ந்து பாமகவை சமாதானப்படுத்தும் படலங்கள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை பாமக எடுக்கவில்லை. ஆனால் கொடுக்க வேண்டுமா? என்கிற யோசனையில் அன்புமணி இருப்பதாகவும், அதன் காரணமாக அதிமுகவினர் தொடர்ந்து தூது மேல் தூது அனுப்பிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
