கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் எஸ். ஜெயகுமார் 9, 693 வாக்கு வித்தியாசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜெயக்குமார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார்.
இவரது வெற்றியை எதிர்த்தும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரியும் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 84-ன் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை எனக்கூறி, ஜெயக்குமாரின் மனுவை ஏற்று, தோப்பு வெங்கடாசலத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளார்.
பெருந்துறை தொகுதிக்கான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதால், அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு சட்டரீதியாக இருந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. இதனால் பெருந்துறை தொகுதிக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தோப்பு வெங்கடாசலம் கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவில் விலகியது குறிப்பிடத்தக்கது.
