Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் அருகே காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று பேர் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாலை நடைபெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த தமிழர்களுக்கு நீதி கோரியும் கன்னடர்களும் வீதிகளில் இறங்கி போராடி வருவதாகக் கூறப்படுகிறது.

Republic Tamil

கர்நாடக வனத்துறையினரால் பொய் வழக்கு புனையப்பட்டு, நடுக்காட்டில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

ஆனால், தமிழகத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் போதிய அக்கறை காட்டப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. பிறருக்காகக் குரல் கொடுத்து வரும் நாம், நம்முடைய உரிமைகள் மற்றும் நம்முடைய மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்காக எப்போது குரல் கொடுக்கப் போகிறோம் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

அதேவேளையில், உயிரிழந்தவர்கள் வேட்டையாடச் சென்றதாகக் கூறி, அவர்களைச் சுட்டுக் கொன்றது சரிதான் என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருவதற்கும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அவர்கள் உண்மையில் வேட்டையாடச் சென்றார்களா, அங்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியாமல், ஒருதலைப்பட்சமாக முடிவுக்கு வருவது சரியல்ல என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "ஆட்சிக்கு வந்து 100 நாள்தான் ஆகுது… அதுக்குள்ள முதல்வர் விஜய்க்கு இவ்வளவு பெரிய 'காலப்பேழை' சாதனை மலரா?!

கர்நாடக அரசு, வனத்துறையினரின் நடவடிக்கை தொடர்பாக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் முழு உண்மையும் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் மேக்கேதாட்டு பகுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. அணை அமையவுள்ள வனப்பகுதிக்குள் யாரும் நுழையக்கூடாது என எச்சரிக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத தகவல்களை உண்மையாகக் கருதாமல், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே முக்கியமானதாகும்.

தமிழர்களை இழிவுபடுத்துபவர்களுக்கு இருக்கும் இன உணர்வுகூட நம்மிடம் இல்லை என்ற வேதனையும் பலரால் வெளிப்படுத்தப்படுகிறது.

நடிகர் ராஜ்குமார் மீட்பில் தமிழர்களின் பங்கை மறந்துவிட்ட சிவகுமாருக்கு பழ. நெடுமாறன் கண்டனம்

இந்நிலையில், நடிகர் ராஜ்குமார் மீட்பு நடவடிக்கையில் தமிழர்களின் பங்கை நினைவுகூர்ந்துள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Pazha. Nedumaran

“எங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். தமிழகத் தலைவர்கள் எங்கள் மாநில விவகாரத்தில் தலையிடக் கூடாது” எனக் கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  "பாக்யராஜ் போட்டோ திறப்பு.. சிவகுமார் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கதறி அழுத பூர்ணிமா, சாந்தனு!"

மேய்ச்சலுக்குச் சென்ற தங்கள் மாடுகள் திரும்பவில்லை என்பதற்காக அவற்றைத் தேடி காட்டுக்குள் சென்ற மூன்று தமிழர்களைக் கர்நாடக வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்திருப்பதைத் தமிழ்நாடு முதலமைச்சரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டித்திருக்கிறார்கள். இதுவொரு மனிதநேயப் பிரச்சினை. எந்த மாநிலத்திலும் மனிதநேயம் மீறப்படுமானால், அதைக் கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.

2000ஆம் ஆண்டில் கர்நாடக எல்லைக்குள் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்று கர்நாடகக் காட்டுக்குள் சிறை வைத்திருந்தபோது, அப்போதைய கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மூன்று முறை தமிழகத்துக்கு ஓடோடி வந்து, அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து, ராஜ்குமாரை மீட்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது வீரப்பன் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பிய செய்தியில், “நெடுமாறனை அனுப்பினால் பேசுவதற்குத் தயார்” என்று தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க, தமிழக முதலமைச்சர் என்னை வேண்டிக்கொண்டதாலும், கர்நாடக முதலமைச்சர் கிருஷ்ணா என்னை அழைத்து வேண்டுகோள் விடுத்ததாலும், நானும், நக்கீரன் கோபாலும், கொளத்தூர் மணியும், பேராசிரியர் கல்யாணியும், சுகுமாரும் காட்டுக்குள் சென்று ஐந்து நாட்கள் வீரப்பன் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அதன்பின்னர் நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது மருமகன் கோவிந்தராஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டு, பத்திரமாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையும் படியுங்க  "CM விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய நோட்டீஸ்! பெரம்பூர் தேர்தல் வழக்கில் அதிரடி!"

அந்த நிகழ்வு நடைபெற்றபோது, “இது எங்கள் மாநிலப் பிரச்சினை; தமிழர்கள் எதற்காக வருகிறீர்கள்?” என்று யாரும் கேட்கவில்லை. அன்று நாங்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டிருக்காவிட்டால், இரு மாநிலங்களிலும் இனக்கலவரங்கள் மூண்டெழுந்து, விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் படுகொலைகளும் நடைபெற்றிருக்கக்கூடும்.

எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடாத அப்பாவித் தமிழர்கள் மூவரைப் படுகொலை செய்துவிட்டு, அதைத் திரையிட்டு மறைக்க முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் சிறிதளவும் மனசாட்சியின்றிப் பேசுவதைப் பார்க்கும்போது, அண்ணல் காந்தியடிகள் தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தானா என்ற ஐயம் எழுகிறது.

முதலமைச்சர் போன்ற பொறுப்பான பதவிகளில் இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து இருக்க அனுமதிப்பது, அவர் சார்ந்துள்ள கட்சிக்குப் பேரிழுக்காகும்.

தமிழர்கள் அனைவரையும் மட்டுமல்ல, மானுடநேயம் கொண்ட அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கும் மூன்று தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தரவும், எதிர்காலத்தில் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் யாருக்கும் இத்தகைய நிலை ஏற்படாமல் பாதுகாக்கவும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமோ அல்லது உச்ச நீதிமன்றத்திடமோ இப்பிரச்சினையை உடனடியாகக் கொண்டுசெல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சரை வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்,

பழ. நெடுமாறன்
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago