Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மறைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜின் நினைவேந்தல் மற்றும் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பழம்பெரும் நடிகர் சிவகுமார், பாக்யராஜின் திரைப் பயணம், படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான சாதனைகளை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசினார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அப்போது பேசிய அவர், அண்மையில் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவைத் தொடர்ந்து பாக்யராஜும் மறைந்திருப்பது, கிராமத்து வாழ்க்கையையும் மனித உணர்வுகளையும் கவித்துவமாக திரையில் பதிவு செய்த இரண்டு மகத்தான படைப்பாளிகளை தமிழ் சினிமா இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

மேலும், தானே கதை, வசனம் எழுதி, தானே இயக்கி, தானே நடித்த கலைஞர்களில் தனது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மூன்று முக்கியமானவர்கள் மணிவண்ணன், ஆர். சுந்தரராஜன் மற்றும் கே. பாக்யராஜ் என்று குறிப்பிட்டார்.

இதையும் படியுங்க  "பிரவீணாவின் 'R' மோதிரம்... பூர்ணிமாவின் பெருந்தன்மை! பாக்யராஜ் வாழ்வில் நடந்த நெகிழ்ச்சியான உண்மை!"

அவர்களுக்கிடையேயான வித்தியாசத்தை விளக்கிய சிவகுமார், மணிவண்ணனும் ஆர். சுந்தரராஜனும் கதை, வசனம் எழுதி திரைப்படங்களை இயக்கியவர்கள் என்றாலும், கதை, வசனம் எழுதி, இயக்கி, அதே திரைப்படத்தில் தாமே கதாநாயகனாக நடித்த அரிய சாதனையை தொடர்ச்சியாக நிகழ்த்தியவர் பாக்யராஜ் மட்டுமே என்று பாராட்டினார்.

மணிவண்ணன் என் ஊரைச் சேர்ந்தவர். மணிவண்ணன், ஆர். சுந்தரராஜன், பாக்யராஜ் ஆகிய அனைவரும் என்னைவிட சுமார் பத்து வயது இளையவர்கள். ஆனால், அவர்கள் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை. பாக்யராஜ் இயக்கிய எந்தத் திரைப்படத்தையும் எடுத்துப் பார்த்தாலும், அதற்கு இணையான படைப்பை எளிதில் சுட்டிக்காட்ட முடியாது.

அவர் உருவாக்கிய அந்த 25 திரைப்படங்களும் ரத்தினங்கள் போன்றவை. அந்த ரத்தினங்கள் வழியாக பாக்யராஜ் என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டே இருப்பார் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

தொடர்ந்து உருக்கத்துடன் பேசிய சிவகுமார், “அந்த மகா மனிதருக்கு மனைவியாக வாழும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். உங்கள் துயரம் எனக்குப் புரிகிறது. அதே நேரத்தில், அவருக்குப் பிள்ளையாகப் பிறந்த பெருமையையும் நினைத்து மனநிறைவு கொள்ள வேண்டும்,” என்று பூர்ணிமா பாக்யராஜுக்கும், மகன் சாந்தனுவுக்கும் ஆறுதல் கூறினார்.

இதையும் படியுங்க  "சூர்யா அரசியல் என்ட்ரி?! பரபரப்பு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிரடி அறிக்கை!"

சிவகுமாரின் இந்த உருக்கமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பூர்ணிமா பாக்யராஜ், தனது கணவரின் நினைவுகளில் மூழ்கி மேடையிலேயே முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதார். அருகில் இருந்த மகன் சாந்தனு பாக்யராஜும், தாயைத் தேற்ற முடியாமல், தந்தையின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீருடன் கலங்கி நின்றார்.

இறுதியாக, “இந்தச் சூழ்நிலையில் அவரைப் பற்றிய என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்,” என்று சிவகுமார் தனது உரையை நிறைவு செய்தார்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசிய இந்த உருக்கமான வார்த்தைகளும், பூர்ணிமா மற்றும் சாந்தனுவின் கண்ணீர்க் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் ஆழ்ந்த நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago