Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

eps

இரட்டை இலை வசம் இருந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்துள்ளது அதிமுக. பலமான தொகுதிகளிலேயே வாக்குகளைப் பெறத் தவறியது ஏன்? கட்சியின் மூத்த தலைவர்களை அரவணைக்கத் தவறியதன் விளைவா? எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடுத்தகட்டத்தில் அதிருப்தி குரல்கள் எழுமா? என்கிற அதிமுகவின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்திருப்பது கட்சிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, கடந்த தேர்தலில் தாராபுரத்தில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது விவாதங்களை எழுப்பியுள்ளது.

இந்தத் தோல்விக்கு என்ன காரணம்? எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகத்தில் ஏற்பட்ட தவறுகள் என்ன? அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்? கட்சிக்குள் மீண்டும் பெரிய அளவில் அதிருப்தி வெடிக்குமா?

ஓவர் கான்பிடன்ஸ்… கோட்டைவிட்ட இரட்டை இலை
கடந்த தேர்தலில் தாராபுரம் தொகுதியில் சுமார் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக, தவெகவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியிருந்தது. திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த நிலையில், வெற்றி பெற்ற சத்தியபாமா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்.

EPS

இதனால் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவுக்கு எதிர்ப்பு இருக்கும் என்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சூறாவளிப் பிரச்சாரம் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தரும் என்றும் அதிமுக அதீத நம்பிக்கையில் இருந்தது.

தாராபுரத்தைத் தக்கவைத்துக் கொள்வதுடன், மதுராந்தகம் தொகுதியையும் கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் அதிமுக களமிறங்கியது. ஆனால், இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்ததுடன், மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது அக்கட்சிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

திமுக எதிர்ப்பு வாக்குகளைத் தன்வசப்படுத்திய தவெக
தேர்தல் களத்தை ஆரம்பத்தில் இருந்தே திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையிலான நேரடிப் போட்டியாக மாற்றியமைத்ததே விஜயின் முக்கியமான வியூகமாகப் பார்க்கப்படுகிறது. திமுகவைத் தொடர்ந்து விமர்சித்ததன் மூலம், திமுக எதிர்ப்பு வாக்குகளை முழுமையாகத் தனது பக்கம் திருப்ப வேண்டும் என்று தவெக முயன்றார். இதன் காரணமாக, இதுவரை அதிமுகவுக்குக் கிடைத்து வந்த திமுக எதிர்ப்பு வாக்குகளிலும் தவெக கணிசமான பங்கைப் பெற்றது.

மறுபுறம், எடப்பாடி பழனிசாமி தேர்தல் களத்தில் திமுகவை மட்டுமல்லாமல் தவெகவையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். தவெக அரசின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி அதிமுகவின் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தினார். இதற்குப் பதிலடியாக, தேர்தலின் கடைசி நான்கு அல்லது ஐந்து நாட்களில் தவெக தரப்பில் இருந்தும் அதிமுகவுக்கு எதிரான விமர்சனங்கள் தீவிரமடைந்தன. தலைமை, குடும்ப அரசியல் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசினர்.

இதையும் படியுங்க  இலை உதிர் காலம்.. கதறும் அதிமுக! திமுகவில் இணைந்த பெஞ்சமின்; அடுத்த விக்கெட் யார்?

ஆனால், இந்த எதிர்வினைகள் அனைத்தும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால், அதிமுகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Republic Tamil

கொங்கு மண்டலத்தை கோட்டைவிட்ட அதிமுக
அதிமுகவின் வலுவான அரசியல் தளமாகக் கருதப்படும் மேற்கு மண்டலத்தில், குறிப்பாக கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக மக்களின் ஆதரவு கட்சிக்கு முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. இதனால் தாராபுரம் தொகுதியில் அதிமுகவுக்குப் பெரிய அளவில் வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், பட்டியலின, அருந்ததியர் சமூக மக்களிடம் இருந்தும் குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற முடிந்தால், கடந்த தேர்தலில் இருந்த சுமார் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தை தவெகவால் ஈடுசெய்ய முடியாது என்ற கணக்கீடும் அதிமுக தரப்பில் இருந்தது. ஆனால், கள நிலவரம் வேறுவிதமாக அமைந்தது. கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக மக்களின் வாக்குகளை திமுகவும் கணிசமாகப் பெற்றது.

முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி, முத்துசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்டோர் அடங்கிய திமுகவின் குழுவினர் குண்டடம், மூலனூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் தீவிரமாகப் பணியாற்றினர். தாராபுரம் மற்றும் ஒட்டன்சத்திரம் எல்லைப் பகுதிகளில் உள்ள சுமார் 23 வாக்குச்சாவடிகளில் திமுகவுக்கு வாக்குகள் அதிகரித்தது. அந்த வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைத்திருந்தால் தேர்தல் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.

தனது வலுவான பகுதிகளிலேயே திமுகவின் வாக்குகளைத் தடுக்க முடியாதது அதிமுகவுக்குப் பின்னடைவாக அமைந்தது.

eps

நகர்ப்புற வாக்குகளைத் தவறவிட்ட எடப்பாடி
தாராபுரம் தொகுதியில் அதிமுக தனது பலமான ஒன்றியப் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகவும், பலவீனமான பகுதிகளில் போதிய கவனம் செலுத்தத் தவறியதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தொடக்கச் சுற்றுகளில் அதிமுக முன்னிலை பெற்றிருந்தாலும், நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அங்கு திமுகவும், தவெகவும் வாக்குகளைப் பிரித்துக் கொண்ட நிலையில், அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

தனது பாரம்பரிய வாக்காளர்களை மட்டுமே நம்பியிருந்தது போதுமானதாக இருக்கவில்லை என்பதையே இந்த முடிவுகள் உணர்த்துகின்றன. வலுவான பகுதிகளில் கிடைத்த முன்னிலையைப் பலவீனமான பகுதிகளில் கிடைத்த வாக்குகள் ஈடுசெய்ய முடியாததால், தேர்தலின் அடுத்தடுத்த சுற்றுகளில் அதிமுக பின்னடைவைச் சந்தித்தது.

வெற்றியாக மாற்ற முடியாதது ஏன்?
இந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். விவசாயப் பின்னணி, மக்களுடன் நெருக்கமாகப் பழகும் தன்மை உள்ளிட்டவற்றை முன்வைத்து வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். திமுகவையும், தவெகவையும் விமர்சித்து, பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்தார். இதன் காரணமாகவே அதிமுக கணிசமான வாக்குகளைப் பெற்றது. குறிப்பாக, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது கட்சியின் அடிப்படை வாக்கு வங்கி இன்னும் முழுமையாகச் சரிந்துவிடவில்லை என்பதைக் காட்டுகிறது.

இதையும் படியுங்க  பிரதமர் ரேஸில் மோடிக்கு விஜய் சவாலா..? ''அது என்ன மாங்கொட்டையா? செங்கோட்டைல..!'' -மக்கள் சொன்ன ஷாக் பதில்!

ஆனாலும், தேர்தல் அரசியலில் வாக்குகளைப் பெறுவது மட்டுமல்ல, வெற்றியைப் பெறுவதுதான் முக்கியம். தனிப்பட்ட தலைவரின் தீவிரப் பிரச்சாரம் மட்டுமே ஒரு கட்சிக்கு வெற்றியை உறுதி செய்துவிடாது என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உணர்த்துகிறது.

கட்சிக்குள் ஒருங்கிணைப்பு இல்லையா?
எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் முடிவுகள் எடுக்கப்படும் விதம் குறித்து அதிமுகவில் இருந்து விலகிய சில தலைவர்கள் ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்திருந்தனர். கட்சியின் முக்கிய முடிவுகள் ஒருவரை மையமாகக் கொண்டே எடுக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முழுமையாகக் களத்தில் இறக்கப்படவில்லை. அவர்கள் நட்சத்திரப் பேச்சாளர்களாகப் பயன்படுத்தப்படவில்லை. அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால் தவெகவுக்கு எதிராக அதிமுகவின் வாக்குகளை அதிகரித்திருக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

அதே நேரத்தில், முக்கியத் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டிய அவசியம் இருந்தது. அவர்களுடன் ஏற்பட்ட இடைவெளியைச் சரிசெய்யத் தவறியது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஒருங்கிணைப்பு அவசியமா?
அதிமுகவின் முன்னாள் தலைவர்களான வி.கே. சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடனான அரசியல் உறவுகளும் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன. இந்தத் தேர்தலில் டிடிவி தினகரன் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் தினகரன் தலையிட்டு நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம், கட்சித் தொண்டர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது.

இத்தகைய சூழலில், அதிமுகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்துவதற்காகப் பிரிந்து சென்ற தலைவர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்ற நடைமுறைக்கு ஏற்ப, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தென் மாவட்டங்களில் பலவீனம்
அதிமுகவின் அரசியல் வலிமை குறித்த விவாதத்தில் சமூக ஆதரவு மற்றும் பிராந்திய அரசியல் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. முக்குலத்தோர் சமூக மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற விமர்சனம் ஏற்கெனவே அதிமுகவுக்குள் எழுந்திருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்லாமல், கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதாகக் கருதுபவர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இதையும் படியுங்க  ''நம்பிக்கை துரோகி.. கையில சிக்கிடாதே..! மிரட்டிய அன்பில் மகேஷ் டீம்..! பகீர் கிளப்பிய ஆடியோ..!

தென் மாவட்டங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத நிலையில், மேற்கு மண்டலம், வட மாவட்டங்களில் இருந்த ஆதரவுதான் அதிமுகவின் தேர்தல் வலிமைக்கு முக்கிய அடித்தளமாக இருந்தது.

கடந்த காலங்களில் கூட்டணியின் ஆதரவுடன் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது தனது வலுவானதாகக் கருதப்பட்ட பகுதிகளிலேயே சவால்களை எதிர்கொள்வது கட்சியின் எதிர்கால வியூகங்கள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஏற்பட்ட தோல்வி, அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edappadi

எடப்பாடிக்கு நெருக்கடி ஏற்படுமா?
தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறும் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்து கட்சிக்குள் விவாதங்கள் எழ வாய்ப்புள்ளது.

தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது யார் என்ற கேள்வி எழும்போது, பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, கட்சியின் உள்கட்டமைப்பு, தலைவர்களுக்கு இடையிலான உறவு, கூட்டணி வியூகம், சமூக ஆதரவு, தேர்தல் பிரச்சார முறைகள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

சுயபரிசோதனை செய்யுமா அதிமுக?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தோல்வி அதிமுகவுக்கு ஒரு முக்கியமான அரசியல் எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டாலும், கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பு, முக்கியத் தலைவர்களின் ஒத்துழைப்பு, சமூக ஆதரவு மற்றும் வாக்காளர்களைச் சென்றடையும் தேர்தல் வியூகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் அரவணைப்பது, அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பலவீனமான பகுதிகளில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அதிமுகவின் எதிர்காலத்துக்கு உதவக்கூடும்.

மொத்தத்தில், இடைத்தேர்தல் தோல்வி என்பது இரண்டு தொகுதிகளை இழந்ததோடு முடிந்துவிடும் விவகாரம் அல்ல. அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி, தலைமைத்துவம், கட்சிக்குள் ஒருங்கிணைப்பு, எதிர்காலத் தேர்தல் வியூகம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலை இந்த முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. எடப்பாடி பழனிசாமி இந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்று தனது வியூகங்களை மாற்றியமைக்கிறாரா? அல்லது கட்சிக்குள் அதிருப்தி மேலும் அதிகரிக்கிறதா? என்பதுதான் அடுத்தகட்ட அரசியலில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago