தமிழ்நாடு அரசு, மாநகர மற்றும் டவுன் பேருந்துகளில் பெண்களுக்கு ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பயண வசதியை வழங்கி வருகிறது. இந்தப் பயணங்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகப் பதிவு செய்வதற்காக, பெண்களுக்கு பூஜ்ஜிய கட்டண (Zero Fare) டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றிய கோவிந்தன், பேருந்தில் பெண் பயணிகள் யாரும் இல்லாத நிலையிலும், இலவச டிக்கெட்டுகளை வரிசையாகக் கிழித்து கீழே வீசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அம்பத்தூர் எஸ்டேட்டிலிருந்து தீவுத் திடல் நோக்கிச் சென்ற 7MX என்ற அரசு பேருந்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பெண் பயணிகள் யாரும் இல்லாத நிலையிலும், அவர்கள் பயணம் செய்தது போல் போலியாக இலவச டிக்கெட்டுகளை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வீடியோ வைரலாகி அரசு அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, போக்குவரத்துக் கழகம் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தது. அதன்படி, அம்பத்தூர் பணிமனையைச் சேர்ந்த நடத்துநர் கோவிந்தன் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்கும் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அந்தந்த வழித்தடங்களின் தேவையும், பேருந்துகளின் இயக்கமும், திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் கணக்கிடப்படுகிறது.
போதிய பயணிகள் இல்லாத வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்ற காரணத்தினாலோ அல்லது பயணிகளின் எண்ணிக்கையை போலியாக அதிகரித்துக் காட்டுவதற்காகவோ சிலர் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், மகளிர் இலவச பயணத் திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடனும் முறையாகவும் செயல்படுத்தவும், போக்குவரத்துத் துறை தற்போது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
