நடிகர்ரஜினிகாந்த் மு. க. ஸ்டாலின் மற்றும் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய விமர்சனங்கள் மற்றும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்து பரபரப்பான பேட்டி வழங்கியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் பரவியதாக அவர் கூறினார். “அவற்றுக்கு நான் பதில் அளிக்காமல் இருந்தால், அவை உண்மையென ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாகிவிடும்,” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதும், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்தது குறித்து விளக்கம் அளித்த அவர், “ஸ்டாலின் சார் எனது 38–40 ஆண்டுகால நண்பர். எங்களுடைய நட்பு அரசியலைத் தாண்டிய ஒன்று. ஜனநாயகத்தில் வெற்றி–தோல்வி சகஜம். ஆனால் கொளத்தூரில் அவர் தோல்வியடைந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. அதனால் நண்பனாகச் சென்று சந்தித்தேன்,” என்றார்.
மேலும், விஜய் முதலமைச்சராக வரக்கூடாது என்பதற்காக நான் சென்றேன் என்றும், திமுக–அதிமுக இணைப்பை ஏற்படுத்த முயன்றேன் என்றும் கூறப்படுவது முற்றிலும் தவறு. அப்படி தரங்கெட்ட முறையில் நடக்கும் மனிதர் நான் அல்ல,” என்று அவர் வதந்திகளை மறுத்தார்.
விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கும் அவர் பதிலளித்தார். “விஜய் வெற்றி பெற்ற உடனே நான் சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தேன். பின்னர் பயணத்தின் போது ஒருவர் திடீரென ‘விஜய் முதலமைச்சராகிவிட்டாரே?’ என்று கேட்டபோது நான் சிரித்துக்கொண்டே சென்றேன். அதை வைத்து தேவையற்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டன,” என்றார்.
விஜய் மீது பொறாமை உள்ளதாக கூறப்படுவதையும் ரஜினிகாந்த் மறுத்தார். “நான் அரசியலில் இல்லை என்று ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டேன். அப்படியிருக்கையில் விஜயை பார்த்து எனக்கு ஏன் பொறாமை வர வேண்டும்? எனக்கும் விஜய்க்கும் சுமார் 25 ஆண்டுகள் தலைமுறை வித்தியாசம் உள்ளது. அவரை என்னுடன் ஒப்பிடுவது அவருக்கும் நல்லதல்ல, எனக்கும் நல்லதல்ல,” என்று கூறினார்.
மேலும், “52 வயதில் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போன்ற தலைவர்களின் சாதனையை விட பெரிய சாதனையை விஜய் படைத்துள்ளார். மத்திய அரசும், தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளும் இருந்த நிலையிலும், தனிப்பட்ட முறையில் வெற்றி பெற்றுள்ளார். அது எனக்கு பொறாமை அல்ல; ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி,” என்று பாராட்டினார்.
விஜய்க்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதாகவும், “அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அரசியலில் தலையீடு செய்வதில்லை என மீண்டும் வலியுறுத்திய அவர், “நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதை ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளேன். எந்த தவறும் நடந்தாலும் அது நேரடியாக விஜயை பாதிக்கும். அவருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதே என் விருப்பம்,” என்றார்.
இறுதியாக, “முதலமைச்சர் விஜய்க்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும்,” என்றும் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
