உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடியது. இக்கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். ஆகையால் இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற உச்சரித்த படியே கிரிவலம் வருகின்றனர்.
குறிப்பாக வெள்ளி மற்றும் வார முறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை வழிபட்டு அவரின் அருளை பெறுகின்றனர். இந்நிலையில் இக்கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் செல்போன்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தடையை மீறி செல்போன் கொண்டு செல்லும் பக்தர்களின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போனை பாதுகாப்பாக வைப்பதற்காக கிழக்கு ராஜகோபுரம் அருகே இரண்டு இடங்களிலும், அம்மணி அம்மன் கோபுரம் அருகே 2 இடங்களிலும் திருமஞ்சன கோபுர வாயிலின் வெளியே ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை இந்த பாதுகாப்பு மையங்களில் 5 ரூபாய் கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கள் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
