ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளில், திரிணாமுல் காங்கிரஸ் தேசியத் தலைவர் மம்தா பானர்ஜி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், ‘பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். வங்காளத்தில் ஒரு பயங்கரவாத ஆட்சி தொடங்கிவிட்டது. இதற்கு எதிரான தனது தார்மீக, அரசியல் போராட்டம் தொடங்கிவிட்டது. இந்த இயக்கத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிற சமூக அமைப்புகளும் இணைய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
காளிகாட் சந்திப்பு, முக்தால் மற்றும் தீயணைப்பு நிலையத்தின் முன்பும் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளைக் கொண்டாட அனுமதி கோரினோம். ஆனால், அந்த மூன்று இடங்களிலும் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த முறை மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? இதனால், கட்சி அலுவலகத்திற்கு வெளியே பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்தோம். இது ஒரு முழுமையான சர்வாதிகாரம். திரிணாமுல் காங்கிரஸை அமைதியாக்குவதற்கான முயற்சி. அச்சமற்றவர்களும், தங்கள் தாய்நாட்டை உண்மையாக நேசிப்பவர்களும் தாங்களாகவே ஒன்றுபடுவார்கள் என்று நம்புகிறேன். நானே ஒரு வழக்கறிஞர், பாஜகவுக்கு எதிராக வெளிப்படையாகப் போராடுவேன்.
வங்காளத்தில் உள்ள எனது கட்சித் தொண்டர்கள் ஒடுக்கப்படுகின்றனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவர் என்னுடன் வசித்து வருகிறார். ஆனால் தற்போது அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார். அதே குடும்பத்தைச் சேர்ந்த புதுமணப்பெண் ஒருவரும் பாஜகவால் மிரட்டப்பட்டு, வீட்டை காலி செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். பல கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளுக்கு வெளியே குண்டர் தனமான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் காவல்துறை முற்றிலும் மௌனம் காக்கிறது” என்று மம்தா குற்றம்சாட்டினார்.
