இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2002-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ரன்’ திரைப்படம், வரும் ஜூலை 10, 2026 அன்று டிஜிட்டல் தரத்தில் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
முன்னதாக, இந்தப் படம் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூலை 10-ஆம் தேதி புதிய அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வித்யாசாகர் இசையமைத்த இந்தப் படத்தின் ‘காதல் பிசாசே’, ‘தெரடி வீதியில்’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்று வருகின்றன. சென்னை நகரை பின்னணியாகக் கொண்டு, ஆக்ஷன் மற்றும் காதலை இணைத்து லிங்குசாமி உருவாக்கிய இந்தப் படம் அப்போது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அதேபோல், மாதவன் மற்றும் விவேக் இணைந்து நடித்த ‘அல்வா’, ‘காக்கா பிரியாணி’ உள்ளிட்ட நகைச்சுவைக் காட்சிகள் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடி காட்சிகளாக இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் சினிமாவில் பழைய சூப்பர் ஹிட் படங்கள் டிஜிட்டல் தரத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் நடைமுறை அதிகரித்து வரும் நிலையில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ரன்’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தப் படம் குறித்து பலரும் அறியாத ஒரு சுவாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது. ‘ரன்’ திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் விஜய். ஆனால் சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதால், பின்னர் அந்த வாய்ப்பு மாதவனுக்குக் கிடைத்தது.
‘அலைபாயுதே’, ‘மின்னலே’ போன்ற படங்கள் மூலம் காதல் கதாநாயகனாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்த மாதவனிடம், இனி காதல் கதைகளைத் தாண்டி ஆக்ஷன் படங்களிலும் கவனம் செலுத்துமாறு இயக்குநர் மணிரத்னம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்தப் படத்திற்காக மாதவன் தனது உடல் எடையை சுமார் 8 கிலோ வரை குறைத்து, முழுநீள ஆக்ஷன் ஹீரோவாக புதிய தோற்றத்தில் நடித்தார்.
இந்தப் படத்தின் நாயகியாக முதலில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவருக்குப் பதிலாக ரைமா சென் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தமிழ் வசனங்களைப் பேசுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, இறுதியாக மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக தேர்வானார். இதுவே அவர் நடித்த முதல் தமிழ் திரைப்படமாகும்.
மேலும், ஏப்ரல் 24-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், அதே நாளில் விஜய்யின் வெற்றிப்படமான ‘சிவகாசி’ ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதால், தியேட்டர் ஒதுக்கீடு மற்றும் வசூல் பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் ஜூலை 10-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
‘ரன்’ திரைப்படம் தமிழில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கில் சுனில் நடித்த சில புதிய காட்சிகளுடன் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பின்னர், இந்தியில் அபிஷேக் பச்சன் மற்றும் பூமிகா சாவ்லா நடிப்பில் ‘Run’ என்ற பெயரிலேயே 2004-ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ரன்’ திரைப்படம், பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
