Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Prakash Raj

கர்நாடகாவில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியான SIR நடவடிக்கைக்குப் பிறகு, பெங்களூரு மத்திய தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், தான் பிறந்து, வளர்ந்து, பள்ளி, கல்லூரிகளில் படித்து, நாடகத் துறையில் ஈடுபட்டு வந்த பெங்களூரு தொகுதியிலேயே தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Republic Tamil

மேலும், இதே பெங்களூரு மத்திய தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது வாக்காளர் பட்டியல் பதிவு நீக்கப்பட்டிருப்பதை கிண்டலாக “நல்ல நகைச்சுவை” எனக் குறிப்பிட்ட பிரகாஷ் ராஜ், தனது வாக்குரிமையை மீண்டும் பெறுவதற்கு என்னென்ன ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைப் பார்க்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

“விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது. எனது வாக்காளர் அட்டையைத் திரும்பப் பெற என்னென்ன ஆவணங்கள் காட்ட வேண்டும் என்று பார்க்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  5 DIY Home Decor Ideas on a Budget

தொடர்ந்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு வாக்களிக்காத சில குடிமக்களின் வாக்குரிமையைத் தடுக்க முடியும் என்றாலும், ஆட்சியில் இருப்பவர்களைத் தேர்தல் மூலம் கீழே இறக்கும் மக்களின் சக்தியைத் தடுக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“உங்களுக்கு வாக்களிக்காத சில குடிமக்களின் வாக்குரிமையை உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நீங்கள் தடுக்கலாம். ஆனால், உங்களைப் பதவியில் இருந்து கீழே இறக்கும் எங்களின் சக்தியை உங்களால் தடுக்க முடியுமா?” என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தேர்தல் ஆணையம் தொடர்பான தகவல்களின்படி, பெங்களூரு மத்திய தொகுதியின் சாந்திநகர் பகுதியில் உள்ள ASDDO பட்டியலில் பிரகாஷ் ராஜின் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் இல்லாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள்,

இறந்தவர்கள், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட வகைப்பாடுகள் இடம்பெறும் நிலையில், பிரகாஷ் ராஜின் பெயர் “நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்” என்ற காரணத்தின் அடிப்படையில் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகாஷ் ராஜ் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் வாக்காளர் அடையாளப் பதிவு வைத்திருந்ததாக ஏற்கனவே சட்டரீதியான சர்ச்சை இருந்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படியுங்க  "விக்னேஷ் சிவன் மேடையில் தேடிய அந்த 'மீனாகுமாரி' யார்? நயன்தாராவின் மாமியார் பற்றிய மாஸ் ரகசியம்!

இந்த வழக்கில் நீதிமன்றம் அனுப்பிய சம்மன்களுக்கு அவர் ஆஜராகாத நிலையில், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, கடந்த ஜூலை 10ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான அவர், ரூ.4,000 பிணைத் தொகையில் நிபந்தனை ஜாமீன் பெற்றதாக கூறப்படுகிறது.

அந்த விசாரணையின்போது, தமிழ்நாட்டில் இருந்த தனது வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கனவே ஒப்படைத்துவிட்டதாக பிரகாஷ் ராஜ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நபரின் பெயர் பல்வேறு இடங்களில் இடம்பெற்றிருக்கும் பதிவுகள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளை கண்டறிந்து வாக்காளர் பட்டியலைச் சீரமைப்பதற்காகவே SIR நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

Republic Tamil

இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் SIR நடவடிக்கையின் மூலம் பெங்களூருவில் மட்டும் தங்களைப் போன்ற சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இந்தக் கூற்று தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்க  "உணவா? விஷமா? கார்ப்பரேட்டுகளின் முகத்திரையைக் கிழிக்கும் காஜல் அகர்வாலின் 'தி இந்தியா ஸ்டோரி'!"

பிரகாஷ் ராஜின் பெயர் அவரது சொந்தத் தொகுதியிலேயே நீக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என ஒரு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் இருந்தால் அவற்றை சட்டப்படி நீக்குவது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறைதான் என மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால், நடிகர் பிரகாஷ் ராஜின் வாக்காளர் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. தனது வாக்குரிமையை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ், இந்த விவகாரத்தை அரசியல் மற்றும் ஜனநாயகக் கேள்வியாகவும் முன்வைத்துள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago