Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு, தற்போது தமிழகத்தின் அதிமுக்கியமான தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனாவுக்கு தவெகவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட தொடக்கக் காலத்தில், கீர்த்தனா விருதுநகர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடவே திட்டமிட்டிருந்தார். அதற்கேற்ப அங்கேயே தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். ஆனால், தேர்தல் களம் சூடுபிடித்த கடைசி நேரத்தில், எதிர்பாராத திருப்பமாக த.வெ.க.வில் இணைந்தார். கட்சித் தலைமை அவருக்கு சிவகாசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது. சிவகாசி மக்களின் ஆதரவோடு அமோக வெற்றி பெற்ற அவர், இன்று தமிழகத்தின் மிக முக்கியத் துறையான தொழில் துறையின் அமைச்சராகவும் உயர்ந்துள்ளார்.

கீர்த்தனாவின் இந்த மின்னல் வேக வளர்ச்சி, கட்சிக்குள் இருக்கும் மூத்த நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, த.வெ.க.வின் விருதுநகர் மாவட்ட செயலாளரான மாரிசெல்வம் கடும் விரக்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மாரிசெல்வம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் ரசிகர் மன்றப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து, அதன் தொடர்ச்சியாகக் கட்சிப் பணிகளிலும் முன்னின்று உழைத்தவர்.

இதையும் படியுங்க  சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக்கொண்ட தவெக அரசு! கார் திட்ட விவகாரத்தில் துரைமுருகன் கடும் தாக்கு!

கடந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட அவர் சீட் கேட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் கட்சியில் இணைந்த கீர்த்தனாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது 22 ஆண்டுகள் உழைத்த மாரிசெல்வத்திற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் வெளிப்பாடாகவே, சமீபத்தில் தொகுதிக்கு வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவை வரவேற்க மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் செல்லவில்லை என்கிறார்கள்.

தற்போது தொழில் துறை அமைச்சராகப் பெரும் பொறுப்பை ஏற்றுள்ள கீர்த்தனாவுக்கு, சிவகாசி தொகுதியின் வளர்ச்சி ஒருபுறமிருக்க, சொந்தக் கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களைச் சமாளிப்பதே பெரும் சவாலாக இருக்கும் என த.வெ.க.வினர் பேசி வருகின்றனர்.

ஆண்டுகணக்காக உழைத்த அடிமட்டத் தொண்டர்களின் மனக்குமுறலைத் தீர்த்து, மாரிசெல்வம் போன்ற மூத்த நிர்வாகிகளை அரவணைத்துச் சென்றால் மட்டுமே, விருதுநகர் மாவட்டத்தில் த.வெ.க.வை வலுவான இயக்கமாக கீர்த்தனாவால் வழிநடத்த முடியும். இந்த உட்கட்சிப் பூசலை புதிய அமைச்சர் எப்படி கையாளப் போகிறார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago