தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள போதும், முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒட்டுமொத்த அமைச்சரவையுமே ஆட்சி நிர்வாகத்திற்குப் புதியவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு புதிய அரசுக்கு கோப்புகளின் நடைமுறைகள், துறைசார்ந்த நுணுக்கங்கள், ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கே சில மாதங்கள் வரை தாராளமாகத் தேவைப்படும். இந்த நிர்வாக அனுபவமின்மையைப் பயன்படுத்தி, பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர்கள் சில காரியங்களைச் சாதித்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
த.வெ.க. அமைச்சர்கள் தங்களது துறைகளைக் கற்றுக் கொள்ளும் இந்த இடைப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி, தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் இன்னும் தங்களது பழைய துறைகளின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ரகசியமாகப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
முக்கியமாக, தாங்கள் அமைச்சர்களாக இருந்தபோது அறிவிக்கப்பட்ட திட்டங்கள், டெண்டர்களைக் கையில் எடுத்து, தங்களுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களுக்கு முன்தேதியிட்டு பணி ஆணை வழங்குமாறு அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போடுவதாக கூறுகிறார்கள்.
கடந்த ஆட்சியில் தங்களுக்குப் பிடித்தமான இடமாற்றங்கள், சலுகைகளைப் பெற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள் சிலர், இன்னும் பழைய அமைச்சர்கள் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக அவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, புதிய அரசுக்குத் தெரியாமலேயே பல முக்கியக் கோப்புகள் நகர்வதாகவும், டெண்டர் விவகாரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தற்போதைய த.வெ.க. தரப்பில் முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன.
நிர்வாகம் இன்னும் முழுமையாகக் கைக்குள் வராத சூழலில், திரைமறைவில் நடக்கும் இதுபோன்ற விவகாரங்கள் த.வெ.க. அரசுக்குத் தொடக்கத்திலேயே அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும். எனவே, முதலமைச்சரும் புதிய அமைச்சர்களும் தங்களது துறைகளின் அதிகாரிகளை முழுமையாகக் கண்காணிப்பில் வைப்பதோடு, பழைய கோப்புகளையும் மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியமாக மாறியுள்ளது.
