https://republictn.com/

மனிதனுக்கு அழகு மனிதாபிமானம் என்பார்கள். அந்த வகையில், டெல்லியில் ஏற்பட்ட கோர தீவிபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மனிதாபிமானத்துடன் உதவி செய்த மெத்தைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மகளின் செயல் சமூக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதி மற்றும் உணவகம் செயல்பட்டு வந்த கட்டிடத்தில் ஜூன் 3ஆம் தேதி அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 9 இந்தியர்களும், 12 வெளிநாட்டவர்களும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரைத் தளத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் தொடங்கிய தீ, வேகமாக மேல்தளங்களுக்கு பரவியதால் கட்டிடத்திற்குள் இருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். சிலர் உயிர் தப்புவதற்காக ஜன்னல்கள் வழியாக கீழே குதிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

அந்த இக்கட்டான நேரத்தில், தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்கு எதிரே சுமார் 40 ஆண்டுகளாக மெத்தைக்கடை நடத்தி வந்த ரியாசுதீன் மன்சூரி மற்றும் அவரது மகள் ஹர்மான் மனிதாபிமானத்துடன் செயல்பட்டனர். தகவல் கிடைத்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக கீழே குதிக்க வசதியாக 20 முதல் 22 புதிய மெத்தைகளை சாலையில் விரித்து உதவி செய்துள்ளனர்.

தீவிபத்தில் சிக்கியவர்கள் உள்ளே செல்லவும் வெளியே வரவும் முடியாமல் தவித்த நிலையில், மேல்தளங்களில் இருந்த பலர் “குதிக்கலாமா?” என்று கதறி கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட ரியாசுதீன் மற்றும் அவரது மகள், போர்வைகள் மற்றும் மெத்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக விரித்து, உயிர் காக்க போராடியவர்களுக்கு பாதுகாப்பாக குதிக்க உதவியுள்ளனர்.

இதுகுறித்து ரியாசுதீன் மன்சூரி கூறுகையில், “எனக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் வெளியே கொண்டு வர பயன்படுத்தப்பட்ட படுக்கை விரிப்புகள், போர்வைகள் உள்ளிட்ட எங்களிடம் இருந்த அனைத்து பொருட்களையும் வழங்கிவிட்டோம்.

மனிதாபிமானத்திற்கு இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் சமம். நாம் அனைவரும் இந்துஸ்தானியர்கள். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நமது சகோதரர்களுக்கு உதவுவது நமது கடமை” என்று தெரிவித்துள்ளார்.

ரியாசுதீனின் இந்த மனிதநேய செயலை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்கள் யார் என்று கூட அறியாமல், ஆபத்தான சூழ்நிலையில் தனது புதிய மெத்தைகள் மற்றும் பொருட்களை வழங்கி பல உயிர்களை காப்பாற்ற உதவிய அவருக்கு அரசு உரிய பாராட்டும், நஷ்டஈடும் வழங்க வேண்டும் என்று இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தீவிபத்தின் மத்தியில் வெளிப்பட்ட இந்த மனிதாபிமான செயல், மனிதநேயம் இன்னும் உயிருடன் இருப்பதை உணர்த்தும் நிகழ்வாக பலராலும் பாராட்டப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 hours ago at 18 hours ago