Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநில போலீசாருக்கு 16 ஆண்டுகளாக சவாலாக இருந்த பலே கார் திருடனும், போலி ஆவணங்கள் தயாரித்து திருட்டு வாகனங்களை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளியுமான ஷாஜித் அரீப்பரம்பில் (47) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஷாஜித், சோடா பாபு, அன்சாரி பாபு, திருச்சி பாபு, சோட்டா பாபு உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வலம் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த அவரை, போலீசார் தற்போது கேரள மாநிலம் மலப்புரத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

வங்கிக் கடன் பெற முயன்றபோது வெளிச்சத்துக்கு வந்த மோசடி

புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர், பழைய கார் விற்பனையாளரிடம் இருந்து கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்தக் காரின் ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கிக் கடன் பெற முயன்றபோது, ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த மோசடி குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்டபோது, திருட்டு கார்களை புதுச்சேரிக்கு கொண்டு வந்து போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

2006-ல் தொடங்கிய வழக்கு

புதுச்சேரியில் கடந்த 2006-ஆம் ஆண்டு பெரியகடை, முத்தியால்பேட்டை, கோரிமேடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 60-க்கும் மேற்பட்ட கார்கள் திருடப்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஷாஜித் அரீப்பரம்பில் சேர்க்கப்பட்டார்.

இதையும் படியுங்க  உண்மை உடைந்தது.. பேரதிர்ச்சியில் இந்தியா! நீட் மறுதேர்விலும் பயோமெட்ரிக் மோசடி அம்பலம்!

அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஷாஜித் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து, 30-க்கும் மேற்பட்ட திருட்டு வாகனங்களைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவு

கைது செய்யப்பட்ட ஷாஜித் பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பின்னர், நீதிமன்ற விசாரணைகளில் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்ததால், நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், மற்ற குற்றவாளிகளுக்கு தனித்தனியாக தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும், ஷாஜித் மட்டும் தலைமறைவாக இருந்ததால் அவரது வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு எதிரான வழக்கு மீண்டும் தொடரப்படும் என கூறப்பட்டுள்ளது.

திருட்டு கார்களுக்கு போலி ஆர்.சி. ஆவணங்கள்

போலீசார் நடத்திய விசாரணையில், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் திருடப்பட்ட வாகனங்களை புதுச்சேரிக்கு கொண்டு வந்து, ஏற்கனவே வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டிருந்த புதுச்சேரி வாகனங்களின் பதிவு எண்களைப் பயன்படுத்தி போலி ஆர்.சி. புத்தகங்கள் தயாரிக்கப்பட்டதாகத் தெரியவந்தது.

பின்னர், திருட்டு வாகனங்களுக்கு புதுச்சேரியில் மறுபதிவு செய்து, வேறு நபர்களின் பெயரில் பதிவு செய்து இரண்டாம் கை வாகனங்களாக விற்பனை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக 53 போலி ஆர்.சி. புத்தகங்கள் இருப்பதாக போக்குவரத்துத் துறை சார்பில் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  ஆரோவிலில் அடிதடி... மத்திய அரசு திட்டத்தால் இருதரப்பினர் இடையே கைகலப்பு...!

இந்த வழக்கில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். எனினும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய நேரடி மற்றும் நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்றும், குறிப்பாக கணினி சார்ந்த முக்கிய ஆதாரங்கள் முழுமையாகச் சேகரிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு தனிப்படை

இந்நிலையில், 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஷாஜித்தை கைது செய்ய தற்போதைய சி.பி.சி.ஐ.டி. சீனியர் எஸ்.பி. நித்யா ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த 12-ஆம் தேதி கேரளாவுக்குச் சென்ற தனிப்படை போலீசார், மலப்புரம் பகுதியில் நான்கு நாட்களாக முகாமிட்டு ஷாஜித்தை தீவிரமாகத் தேடினர். அவரது செல்போன் டவர் லொகேஷன் உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 14-ஆம் தேதி மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே உள்ள அளத்தூர் பகுதியில் தங்கியிருந்த ஷாஜித்தை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பல மாநிலங்களில் வாகனத் திருட்டு

போலீசாரின் விசாரணையில், ஷாஜித் புதுச்சேரி மட்டுமின்றி கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாகனங்களைத் திருடி விற்பனை செய்ததாகத் தெரியவந்துள்ளது.

வெளிமாநிலங்களில் திருடப்பட்ட கார்களை புதுச்சேரிக்கு கொண்டு வந்து, அசல் பதிவு விவரங்களை மறைத்து, புதுச்சேரியில் புதிய பதிவு எண்ணைப் பெற்று மறுபதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் அந்த வாகனங்களை வேறு நபர்களின் பெயரில் பதிவு செய்து, இரண்டாம் கை கார்களாக விற்பனை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் வாகனங்களுக்கான காப்பீடு உள்ளிட்ட ஆவணப் பணிகளில் உதவியவர்களும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  வாரிசா… எமனா? 150 கோடி சொத்துக்காக பெற்ற தந்தையை தீர்த்துக்கட்டிய பாவி மகன்!

கார் மட்டுமல்ல… லாரி, வேன்களும் திருட்டு

கைது செய்யப்பட்ட ஷாஜித் கார்கள் மட்டுமின்றி லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களையும் திருடி விற்பனை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் திருடிய வாகனங்களை பல்வேறு சட்டவிரோதக் கும்பல்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சந்தன மரம், செம்மரம், கஞ்சா, தங்கம் மற்றும் சாராயம் உள்ளிட்டவற்றை கடத்துவதற்காக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திருட்டு வாகனங்களை பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்த கடத்தல் மற்றும் குற்றக் கும்பல்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் ஷாஜித் பல கோடி ரூபாய் சம்பாதித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஒரு மாநிலத்துக்குள் மட்டுமே அவரது குற்றச் செயல்கள் நடைபெறவில்லை என்றும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களுக்கு வாகனங்களை வழங்கி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

16 ஆண்டுகளாக பல்வேறு பெயர்களில் அடையாளத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வந்த ஷாஜித்தை, செல்போன் டவர் லொகேஷன் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் போலீசார் கேரளாவில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஷாஜித்தை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அவருடன் தொடர்புடையவர்கள் மற்றும் திருட்டு வாகனங்களை வாங்கியவர்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago