தமிழக அரசியல், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான ஆட்டத்தை கண்டு வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், விஜய் தலைமையிலான ஆட்சி ஊசலாட்டத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஒரு ஓட்டு தந்த இடியாப்பச் சிக்கல்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனை விட வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு, தற்போதைய ஆட்சியின் நிலைத்தன்மையையே அசைத்துப் பார்த்துள்ளது. தபால் வாக்குகள் மாறியது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த வழக்கின் முடிவு தமிழக அரசியலின் தலையெழுத்தை மாற்றப்போகிறது.

சட்டமன்ற பலப்பரீட்சை
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற விஜய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால், தற்போதைய பலம் 107 ஆகக் குறைந்துள்ளது. இதில் திருப்பத்தூர் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி மீதான தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், மத்தியப் பிரதேசத்தின் முகேஸ் மல்கோத்ரா வழக்கில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி, அவர் எம்.எல்.ஏ-வாகத் தொடர முடியுமே தவிர, வாக்கெடுப்பில் பங்கேற்பது சட்ட ரீதியாகக் கடினம். இதனால் அரசின் நேரடி ஆதரவு 106 ஆகச் சுருங்குகிறது.
கூட்டணிக் கட்சிகளின் கைகளில் அதிகாரம்
தற்போதைய சூழலில், ஆட்சியைக் காப்பாற்ற 117 உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை. விசிக (2), கம்யூனிஸ்ட்கள் (4), காங்கிரஸ் (5) எனத் தோழமைக் கட்சிகளின் 11 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த அரசு பெரும்பான்மையைத் தக்கவைக்க முடியும். குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் விலகினால் அல்லது நடுநிலை வகித்தால், அரசு உடனடியாகப் பெரும்பான்மையை இழந்து தோல்வியைத் தழுவும்.

திமுகவின் கண்ணசைவில் வீழ்ச்சி
தற்போதைய சூழலில் லகான் திமுகவின் கையில் உள்ளது. திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை தவிர விசிக, கம்யூனிஸ்ட்கள் இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார் விஜய். இந்த கட்சிகள் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன. ஆகையால் தான் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளன. விஜய்க்கு ஆதரவளிக்க திருமாவளவன் துணை முதலமைச்சர், கூடுதலாக ஒரு அமைச்சர் பதவி கேட்டு வந்தார். திமுக அறிவுறுத்தலின் பேரில் அந்த டிமாண்டை விடுத்து, வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு என தெரிவித்துள்ளார் திருமாவளவன். ஆகையால் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மைக்குக் திமுக கூட்டணிக் கட்சிகளே ஆதாரமாக இருப்பதால், திமுக அசைக்க நினைத்தால் எந்த நிமிடத்திலும் இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
