சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அழகான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
காடுகளின் காவலர்களாகவும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவையாகவும் விளங்கும் யானைகளைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு பகிர்ந்துள்ள வீடியோவில், குட்டி யானைகள் மற்றும் யானைக் கூட்டங்கள் காட்டில் விளையாடும் அழகான மற்றும் நெகிழ்ச்சியான தருணங்கள் இடம்பெற்றுள்ளன.

வெறும் ரசனைக்காக மட்டுமின்றி, கம்பீரமான இந்த விலங்குகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது ஏன் அவசியம் என்பதற்கான விழிப்புணர்வையும் இந்த வீடியோ மூலம் அவர் ஏற்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்பும் தேப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள ரகு, பொம்மி போன்ற குட்டி யானைகளின் வீடியோக்களையும், யானைகள் காட்டில் ஆனந்தமாகத் தூங்கும் அரிய காட்சிகளையும் சுப்ரியா சாகு பகிர்ந்திருந்தார். அந்தக் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்திருந்தன.
காடழிப்பு, தந்தத்திற்காக வேட்டையாடப்படுதல் மற்றும் மனித-யானை மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளைப் பாதுகாப்பதே உலக யானைகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
2026ஆம் ஆண்டின் உலக யானைகள் தினத்தின் கருப்பொருள், “யானைகளுக்கு உதவ உலகை ஒன்றிணைத்தல்” (Bringing the world together to help elephants) என்பதாகும். யானைகளைப் பாதுகாப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது.
உலகில் உள்ள ஆசிய யானைகளில் சுமார் 60 சதவீதம் இந்தியாவில் வாழ்கின்றன. இந்தியாவில் உள்ள யானை காப்பகங்கள் மற்றும் ‘ப்ராஜெக்ட் எலிஃபென்ட்’ (Project Elephant) உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் யானைகளின் பாதுகாப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யானைகள் காடுகளின் சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை விதைகளைப் பரப்புவதன் மூலம் காடுகளின் இயற்கையான மறுஉற்பத்திக்கும், பல்வேறு உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுகின்றன.
3,266 மீட்டர் உயரத்தில் நடமாடிய காட்டு யானைகள்!
இதனிடையே, ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

ஆசிய காட்டு யானைகள் பொதுவாக சமவெளிப் பகுதிகள் மற்றும் குறைந்த உயரமுள்ள மலைப் பகுதிகளில் வாழ்வதாகக் கருதப்படும் நிலையில், ஆய்வாளர்கள் முதன்முறையாக அருணாச்சலப் பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,266 மீட்டர் உயரத்தில் காட்டு யானைகள் நடமாடுவதை ஆவணப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கண்டுபிடிப்பு, ஆசிய யானைகளின் குறிப்பிடத்தக்க தகவமைப்புத் திறனை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த அழகான காட்சிகள், யானைகளின் மீதான அன்பையும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் ஒருசேர உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன.
“மென்மையான ராட்சதர்கள்” என அழைக்கப்படும் யானைகளைத் துன்புறுத்தாமல், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறைகளும் அவற்றைக் காணும் வகையில் பாதுகாப்போம் என்பதே இந்த நாளில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்.
