ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் தேசிய அளவில் தொடர்ந்து வளர்ச்சி காணப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வரி வசூல் சரிவைச் சந்தித்து வருவது பொருளாதார ரீதியாக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்திய அளவில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து மூன்றாவது மாதமாக 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் தொடர்ந்து சரிவு பதிவாகியுள்ளது.
செப்டம்பர் 2026-க்கான அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, நாட்டின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 14.7 சதவீதம் உயர்ந்து, 2 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான 10 ஆயிரத்து 670 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு செப்டம்பர் மாத வசூல் 5 சதவீதம் குறைந்து, 10 ஆயிரத்து 188 கோடி ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா 1 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் குறைந்திருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் இந்தச் சரிவு 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் முன்னணி மாநிலங்களில் தொடர்ந்து எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்யும் மாநிலமாக தமிழ்நாடு மட்டும் உள்ளது.
தமிழ்நாட்டின் மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் விவரம்:
- ஜூலை 2026 – ₹10,414 கோடி
- ஆகஸ்ட் 2026 – ₹10,189 கோடி
- செப்டம்பர் 2026 – ₹10,188 கோடி
இதனால், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிவைச் சந்தித்துள்ளது.
இந்தச் சரிவை முன்வைத்து, முன்னதாக இருந்த திமுக ஆட்சிக் காலத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்த மாநிலத்தின் நிதிநிலை, தற்போது புதிய ஆட்சி அமைந்த பிறகு சரிவை நோக்கிச் செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அதேவேளையில், ஜிஎஸ்டி 2.0 வரி விகித மாற்றங்களால் உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டின் வரித்தளம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, இறக்குமதி வரிப் பங்குகள் மாநிலங்களுக்கான வருவாய் கணக்கில் உடனடியாகப் பிரதிபலிக்காததும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டின் தற்போதைய சரிவை மதிப்பிடும்போது கடந்த ஆண்டின் வருவாய் அளவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில், அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான அச்சம் காரணமாக திருப்பூர் ஜவுளி ஏற்றுமதி அதிகரித்தது. இதன் விளைவாக அப்போது தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூலும் அதிகரித்தது.
அதிக அளவில் இருந்த அந்த அடிப்படை வருவாயுடன், இந்த ஆண்டின் இயல்பான வர்த்தகப் புழக்கத்தை ஒப்பிடுவதால், தற்போதைய வளர்ச்சி மைனஸ் 5 சதவீதமாகத் தெரிகிறது என்று நிபுணர்கள் விளக்குகின்றனர். இதனை ‘ஹை பேஸ் எஃபெக்ட்’ எனப்படும் அதிக அடிப்படை விளைவு என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரத்தில், தமிழ்நாட்டில் நுகர்வு முற்றிலும் முடங்கிவிட்டதாகக் கூற முடியாது என்றும் ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ஒரே சீரான நிலையில் இருப்பதாகவும், நுகர்வு வீழ்ச்சியடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி 2.0 வரி விகித மாற்றங்களால் மாநிலங்களுக்கான வரிப் பங்கீட்டில் தற்காலிகத் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், எனவே தற்போதைய சரிவை மட்டும் வைத்து மாநிலத்தின் ஒட்டுமொத்த நுகர்வு அல்லது பொருளாதார செயல்பாடு முடங்கிவிட்டதாகக் கருத முடியாது என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
இருப்பினும், தொடர்ந்து மூன்று மாதங்களாக வரி வசூலில் எதிர்மறை வளர்ச்சி பதிவாகி வருவது மாநிலத்தின் வருவாய் நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளதாகவும், வருவாய் இயந்திரம் ‘ரெட் ஃபிளாக்’ எனப்படும் சிவப்பு எச்சரிக்கையைக் காட்டுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் நிதி அழுத்தம் ஏற்படக்கூடும் என்றும் சிலர் எச்சரித்துள்ளனர்.
தேசிய அளவிலான ஜிஎஸ்டி வசூலைப் பார்க்கும்போது, செப்டம்பர் மாதத்தில் மகாராஷ்டிரா 29 ஆயிரத்து 986 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இதனால், சமூக வலைத்தளங்களில் மகாராஷ்டிரா இந்தியாவின் ஒரு மாநிலமா அல்லது ‘ஜிஎஸ்டி ஏடிஎம் கார்டா’ என நெட்டிசன்கள் நகைச்சுவையாக விவாதித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் 5 சதவீதம் குறைந்துள்ள நிலையில், அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் கேரளா வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கர்நாடகாவில் ஜிஎஸ்டி வசூல் 16 சதவீதமும், கேரளாவில் 11 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே இந்தக் காலகட்டத்தில் எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தேசிய அளவில் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்ததற்கான முக்கியக் காரணங்களில் வெளிநாட்டு இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு வணிகப் பரிவர்த்தனைகளின் ஜிஎஸ்டி வளர்ச்சி 10.1 சதவீதமாக இருந்த நிலையில், வெளிநாட்டு இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் 26 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இறக்குமதி சார்ந்த ஜிஎஸ்டி வருவாய் 65 ஆயிரத்து 525 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த இறக்குமதி வருவாய் அதிகரிப்பே, நாட்டின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூலை 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கொண்டு செல்ல முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
இதனிடையே, செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு சில வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைத்தது.
இந்த வரிக் குறைப்பு, மேலும் அக்டோபர் மாதத்தில் வரும் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக் கால நுகர்வு ஆகியவை தமிழ்நாட்டின் வர்த்தகச் செயல்பாடுகளை அதிகரிக்கும் என்றும், அதன் தாக்கம் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூலில் பிரதிபலிக்கும் என்றும் வணிக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
அதாவது, தற்போது தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூலில் தொடர்ந்து மூன்று மாதங்களாக சரிவு காணப்பட்டாலும், அதற்குப் பின்னால் அதிக அடிப்படை விளைவு, ஜிஎஸ்டி 2.0 வரி விகித மாற்றங்கள், இறக்குமதி வருவாயின் மாநில அளவிலான பிரதிபலிப்பு தாமதம் உள்ளிட்ட பல காரணிகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேநேரத்தில், தொடர்ந்து எதிர்மறை வளர்ச்சி பதிவாகி வருவது மாநிலத்தின் வருவாய் நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் மாதத்தில் பண்டிகைக் கால நுகர்வு அதிகரித்தால், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்புமா என்பது அடுத்தடுத்த தரவுகள் வெளியாகும்போது தெரியவரும்.
