Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vettri Payana Thittam

தமிழ்நாட்டில் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், திருநங்கைகள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் வகையில் ‘வெற்றி பயணத் திட்டம்’ இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்தத் திட்டத்தை, இன்று சென்னையில் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம், இந்தத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மதுரை மாவட்டத்திலும் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயங்கும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில், சுமார் 69 சதவீத பேருந்துகளான 12,692 பேருந்துகள் இந்த வெற்றி பயணத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் தினமும் சுமார் 84 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே மதுரை மாவட்டத்தில் நடைமுறை தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Vettri Payana Thittam

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை, மாநகரப் பேருந்துகளில் மட்டுமே வெற்றி பயணத் திட்டத்திற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிலும், அனைத்து நகரப் பேருந்துகளிலும் இதுவரை ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை. ஒரு சில பேருந்துகளில் மட்டுமே ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இலவசப் பயணம் அனுமதிக்கப்படுகிறது. மற்ற பேருந்துகளில் பெண்களிடம் வழக்கம்போல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்., டீலக்ஸ் உள்ளிட்ட எந்த வகையான பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் பொருந்தும் என்பது தொடர்பாகவும் பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "ஸ்கெட்ச் போட்ட ஆவடி விஜய்.. பல்பு வாங்கிய ATM கொள்ளையன்.. கோயம்பேடு போலீசாரின் மாஸ் வேட்டை!"

குறிப்பாக, மதுரையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளான வாடிப்பட்டி, திருமங்கலம், மேலூர், கொட்டாம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சில பேருந்துகளில் இன்று பெண்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பேருந்துகளில் வெற்றி பயணத் திட்டத்திற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அதேபோல், மதுரையிலிருந்து திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்துகளில் பெரும்பாலானவற்றில் வெற்றி பயணத் திட்டத்திற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படாததால், பெண்கள் டிக்கெட் எடுத்துத்தான் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒன் டு ஒன் மற்றும் நான்-ஸ்டாப் பேருந்துகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், எந்தப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது குறித்து பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் இடையே சில இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் கூறுகையில், மதுரையிலிருந்து கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும்போது பேருந்துக் கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருப்பதாகத் தெரிவித்தனர்.

மேலும், இலவசப் பயணம் என்ற அறிவிப்பு இருந்தாலும், நடைமுறையில் அது அனைத்து பேருந்துகளிலும் கிடைக்கவில்லை என்றும், ‘வெற்றி பயணத் திட்டம்’ என்பது பெயரளவிலேயே வெற்றிப் பயணமாக இருப்பதாகவும் சில பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  “ஓட்டு கேட்டு ஊருக்குள்ளே வராதீங்க..!” – தாராபுரத்தில் பிளக்ஸ் பேனர் அடித்து இடைத்தேர்தலை புறக்கணித்த 500 வாக்காளர்கள்!

இலவசப் பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, விலைவாசியைக் குறைத்தால் பொதுமக்களுக்கு அது அதிக பயனுள்ளதாக இருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடத்துநர்கள் கூறுவது என்ன?

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களிடம் கேட்டபோது, மதுரையிலிருந்து இயக்கப்படும் ஒன் டு ஒன் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் கிடையாது எனத் தெரிவித்தனர்.

வெற்றி பயணத் திட்டத்திற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள பேருந்துகளில் மட்டுமே பெண்களை இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Vettri Payana Thittam

மேலும், பெரும்பாலும் ஒரு மாவட்டத்துக்குள் இயக்கப்படும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளுக்கே தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகளில் வெற்றி பயணத் திட்டத்திற்கான ஸ்டிக்கர்கள் இதுவரை முழுமையாக ஒட்டப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஒருசில பேருந்துகளில் மட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், அனைத்து பேருந்துகளிலும் அவை ஒட்டப்படவில்லை என்றும் நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர்.

80 கிலோமீட்டர் வரையிலான பயணமா?

இதுகுறித்து பயணி ஒருவர் பேசுகையில், “80 கிலோமீட்டர் வரையில்தான் இந்த இலவசப் பயணம் என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டுக்குள் நமது மாவட்டங்களுக்குச் செல்லலாம்; அதற்கு அப்பால் செல்ல முடியாது எனத் தெரிவிக்கிறார்கள்” என்றார்.

மேலும், “80 கிலோமீட்டர் என்ற அளவை அவர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். அனைத்து பேருந்துகளிலும் இலவசப் பயணத்திற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா?” என அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மற்றொருவர், “ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேருந்துகளில் மட்டும்தான் இலவசமாகப் பயணம் செய்ய முடியுமா?” எனக் கேட்டார்.

இதையும் படியுங்க  “வெயில் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு தாமதம்..? வெளியான ஹாப்பி நியூஸ்!”

இதற்கு பதிலளித்த பயணி, “ஸ்டிக்கர்கள் விரைவாக ஒட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவற்றை இரவிலேயே தயார் செய்து ஒட்டியுள்ளனர்” என்றார்.

இதனால், திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே மதுரை மாவட்டத்தில் எந்தப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், எந்த வழித்தடங்களில் இலவசப் பயணம், மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகளில் திட்டம் பொருந்துமா, 80 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு மட்டும்தானா சலுகை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழக அரசின் முக்கியத் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள வெற்றி பயணத் திட்டம், தற்போது ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளில் மட்டுமே நடைமுறையில் இருப்பதாக மதுரையின் களநிலவரம் காட்டுவதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, எந்தெந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம், எந்தெந்த வழித்தடங்களில் இந்தத் திட்டம் பொருந்தும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகளுக்கு இந்தச் சலுகை உள்ளதா, எக்ஸ்பிரஸ் மற்றும் ஒன் டு ஒன் பேருந்துகளுக்கு விதிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசும் போக்குவரத்துத் துறையும் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகளிருக்கு இனிமேல் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேருந்துகளில் மட்டுமே இலவசப் பயணம் என்ற நடைமுறை நிலவுவதாகப் பயணிகள் கூறுவதால், திட்டத்தின் முதல் நாளிலேயே குழப்பமும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago