ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 61 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொண்டி அருகே உள்ள எஸ்.பி. பட்டினம் பகுதியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, அண்டை வீட்டில் வசித்து வந்த அலாவுதீன் என்பவரின் பேரன், பேத்திகளுடன் அடிக்கடி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, விலை உயர்ந்த மிட்டாய் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அலாவுதீன் சிறுமியை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குழந்தைகள் உதவி மையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சங்கீதா, சிறுமியிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து, திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முதியவர் அலாவுதீனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
