மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில் பிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், தமிழ்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சருமான தியாகச் சீலர் கக்கனின் 118-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட கக்கன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது மார்பளவு சிலைக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் மேலூர் வட்டாட்சியர் முத்துப்பாண்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, மணிமண்டபத்தில் புதுப்பிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கக்கன் அவர்களின் புகைப்படங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கக்கனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வருகைப் பதிவேட்டில் பதிவு செய்தார்.
மேலும், “கக்கன் பிறந்த இந்த மண்ணில் சமத்துவம் ஓங்க வேண்டும்” என்று மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதாவும் வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டார்.
இந்நிலையில், “திரு. கக்கன் அவர்களின் வழியில் பயணிப்பேன்” என்று உறுதியேற்றிருந்த மேலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமான பெ. விஸ்வநாதன், சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
