தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்திருக்கிறது, அக்டோபர் 26, 2026 அன்று சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த இரட்டை அடி.
ஒரு பக்கம் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி. மறுபக்கம் மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் மறுஆய்வு மனு தள்ளுபடி. இரண்டு தீர்ப்புகளும் ஒரே நாளில்… இதன் பின்னணி என்ன? கைது நிச்சயமா? விரிவாக அலசுகிறது republic – தமிழ்
அன்பில் மகேஷ் – ரூ.100 கோடி ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூல் விவகாரம்! வழக்கு என்ன?
2021-2026 காலத்தில் பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்தபோது, தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து ‘கட்சி நிதி’ என்ற பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக குற்றச்சாட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மோசடியின் மாடல் எப்படி?
2024-ல் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பதிவு செய்யப்படாத அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் நிறுவனத் தலைவர் பி.டி.அரசகுமார் (A1), பொருளாளர் முத்துக்குமார் (A2). அமைச்சரின் நேர்முக உதவியாளர் வலாடி கார்த்திக் மூலமாகத் தான் இந்த சங்கம் உருவானது என்கிறது CCB. 30.12.2024 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த தொடக்க விழாவில் அமைச்சரே கலந்துகொண்டு, பள்ளித் தாளாளர்கள் மத்தியில் இவர்கள் இருவரையும் ‘புரொஜெக்ட்’ செய்ததாக வீடியோ ஆதாரம் இருப்பதாக போலீஸ் சொல்கிறது.
நிரந்தர அங்கீகாரம், அப்கிரேடேஷன், DTCP/CMDA அனுமதி, கட்டிட அனுமதி என அனைத்து அரசு அனுமதிகளுக்கும் இந்த இருவர் வழியாகத்தான் ‘ரேட்’ பேசப்பட்டிருக்கிறது. இதுவரை 177 பள்ளி நிர்வாகங்கள் புகார் கொடுத்து, ரூ.17,26,73,650 பணப்பரிமாற்றம் ஆதாரத்துடன் சிக்கியிருக்கிறது. முழுத் தொகை ரூ.100 கோடியைத் தாண்டும் என்கிறது விசாரணை வட்டாரம்.
ஏன் ஜாமீன் மறுக்கப்பட்டது?
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமைச்சர் 5-வது குற்றவாளி. பணம் நேரடியாக அமைச்சரிடம் கைமாறியதற்கு ஆதாரம் உள்ளது. தலைமறைவாக உள்ள A2 முத்துக்குமாரின் இருப்பிடம் தெரிய அமைச்சரை காவலில் எடுத்து விசாரித்தே ஆக வேண்டும். சாட்சிகள் மிரட்டப்படும் அபாயம் உள்ளது” என வாதிட்டார். இதை ஏற்ற நீதிமன்றம், “சதியின் தன்மை, குற்றத்தின் கடுமை, பணப்பாதை விசாரணை நிலுவையில் உள்ளது” எனக் கூறி முன்ஜாமீனை தள்ளுபடி செய்து தீர்ப்பு அக்டோபர் 16-ல் தேதி குறிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு, 26-ம் தேதி வழங்கப்பட்டது.
முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால், CCB போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. A1 அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டார், A2 தலைமறைவு என்பதால், அமைச்சரின் கஸ்டடியல் விசாரணை அவசியம் என நீதிமன்றத்திலேயே போலீஸ் பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
கே.என்.நேரு – நகராட்சி நிர்வாகத் துறை ‘கேஷ் ஃபார் ஜாப்’ பூதம்! வழக்கு என்ன?
முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு (உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உட்பட) நடந்த நியமனத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு.
ED எப்படி உள்ளே வந்தது?
நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக ED சோதனை நடத்தியபோது, வாட்ஸ்அப் உரையாடல்கள், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட தேர்வுப் பட்டியல்கள், 147 பேருக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்ட நியமனக் கடிதங்கள் சிக்கின. ஹவாலா பணப்பரிமாற்றத்துக்கு ரூ.10 நோட்டுகள் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை ED, பணமோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 66(2)-ன் கீழ் தமிழக போலீசுக்கு அனுப்பியது.
இதன் அடிப்படையில், பிப்ரவரி 20-ம் தேதி உயர் நீதிமன்றம் FIR பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. DVAC ஜூன் 5, 2026-ல் வழக்குப் பதிவு செய்தது.
மறுஆய்வு மனு ஏன் தள்ளுபடி?
“என்னைக் கேட்காமலேயே FIR போட உத்தரவிட்டுவிட்டார்கள்” என நேரு தரப்பு வாதிட்டது. தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு, “FIR போட உத்தரவிடுவது குற்றவாளி என முடிவு செய்வதல்ல; விசாரணையைத் தொடங்குவதுதான்” எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.
கைது அபாயம் இருக்கா?
இது முன்ஜாமீன் மறுப்பு அல்ல; FIR-ஐ ரத்து செய்யக் கோரிய மறுஆய்வு மனு தள்ளுபடி. ஆனால், DVAC விசாரணை தீவிரமடைந்து, விசாரணையில் நேருவுக்கு நேரடித் தொடர்பு உறுதியானால், கைது நடவடிக்கைக்கான கதவு திறந்தே இருக்கிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
நேரு தரப்பு “அரசியல் பழிவாங்கல்” என்கிறது அடுத்தது என்ன?
ஒரே நாளில் இரண்டு மாஜி அமைச்சர்களுக்குப் பின்னடைவு என்பது திமுகவுக்கு மிகப்பெரிய நெருக்கடி. அன்பில் மகேஷ் விவகாரத்தில் கைது நடவடிக்கை உடனடி இன்றே சாத்தியமாகத் தெரிகிறது; நேரு விவகாரத்தில் DVAC விசாரணையின் போக்கே அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும். இரண்டிலும் பொதுவான அம்சம்: நீதிமன்றம் “விசாரணை தேவை” என்பதில் உறுதியாக இருக்கிறது.
