தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று (அக்டோபர் 26, 2026) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், வெள்ள அபாயத்தைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆய்வு நடைபெற்றது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், நீர் இருப்பு, மதகுகளின் செயல்பாடு மற்றும் உபரி நீர் வெளியேற்றத்துக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 14.76 அடியாகவும், நீர் இருப்பு 1.488 டி.எம்.சி.யாகவும் இருந்தது. ஏரியின் முழுக் கொள்ளளவு 24 அடியாகும். பருவமழை தீவிரமடையும் நிலையில், ஏரிக்கு வரும் நீரின் அளவு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏரியின் கொள்ளளவு, உபரி நீர் வெளியேற்றும் நடைமுறைகள் மற்றும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசித்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்னதாக, இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை, அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வெள்ள அபாயம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த சில நிமிடங்களிலேயே, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் நிலவும் சூழலை நேரில் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் செம்பரம்பாக்கம் ஏரிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஏரிப் பகுதியில் மழை தூறிக்கொண்டிருந்த நிலையில், பாதுகாப்புக் குடையைப் பயன்படுத்தாமல் நீல நிற மழைக்கோட் அணிந்தபடி ஏரியின் மதகுகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று விஜய் ஆய்வு செய்தார். ஏரியின் மதகுகள் சீராக இயங்குகின்றனவா, உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் ஏதேனும் தடைகள் உள்ளனவா என்பதையும் அவர் கேட்டறிந்தார். மதகுகள் மற்றும் நீர் வெளியேற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளை நேரடியாகச் செய்து காண்பிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டு, அவற்றின் செயல்பாட்டை உறுதிப்படுத்தினார்.
முதலமைச்சர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வருகை தந்ததை அறிந்த ஏராளமான பொதுமக்களும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் செம்பரம்பாக்கம் பாலத்திலும் சாலையின் இருபுறங்களிலும் திரண்டனர். ஆய்வை முடித்துவிட்டுத் திரும்பிய விஜய், காரில் ஏறிய பின்னர் முன்பக்கக் கதவைத் திறந்து வெளியே வந்து, அங்கு கூடியிருந்த மக்களை நோக்கிக் கையசைத்ததுடன், இரு கைகளையும் இணைத்து இதய வடிவில் சைகை காட்டினார். இதனால் உற்சாகமடைந்த தவெக தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த அக்டோபர் 14ஆம் தேதி, சென்னை ஒக்கியம் மடுவு கால்வாய் மற்றும் பெரம்பூர் முல்லை நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, அக்டோபர் 22ஆம் தேதி, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்குச் சென்று, பேரிடர் மேலாண்மைத் துறையின் தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் ஆகியவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கனமழை தீவிரமடையும் சூழலில், சென்னையின் குடிநீர் ஆதாரத்தைப் பாதுகாப்பதுடன், ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டால், தாழ்வான பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படாமல் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
