2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்குப் பிறகு, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய், தனது முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த கையோடு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க அவரது வீட்டிற்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டுகளாக நீடித்து வந்த திமுக – அதிமுக என்கிற இருமுனைப் போட்டியை உடைத்து, 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக தலைவர் விஜய், தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார். சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற பிறகு, அவர் மேற்கொள்ளும் இந்த முதல் சந்திப்பு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் களத்தில் “ஊழலுக்கு எதிரான போர்”, “பழைய அரசியல் முறைக்கு விடை” என திமுக அரசை விஜய் கடுமையாக விமர்சித்திருந்தாலும், வெற்றிக்குப் பிறகு ஒரு முன்னாள் முதலமைச்சரைச் சந்திப்பது ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டைக் காட்டுகிறது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் காலத்து அரசியல் நாகரிகத்தை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக் செய்தியில், “நிர்வாக நுணுக்கங்களை விஜய் விரைவில் கற்றுக்கொள்வார்” எனக் குறிப்பிட்டிருந்தார். 10 லட்சம் கோடி கடன் சுமை மற்றும் காலி கஜானா குறித்த விஜய்யின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தாலும், மாநிலத்தின் நலன் கருதி அனுபவம் மிக்க ஒரு தலைவரிடம் ஆலோசனை பெறுவது விஜய்யின் நிர்வாகத் திறனுக்கு வலு சேர்க்கும்.
திமுக தற்போது பலமான எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், சட்டப்பேரவையில் சுமூகமான விவாதங்கள் நடைபெறவும், மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேவையற்ற முட்டுக்கட்டைகளைத் தவிர்க்கவும் இந்தச் சந்திப்பு ஒரு பாலமாக அமையும். “அரசியல் வேறு, அரசாங்கம் வேறு” என்ற முதிர்ச்சியை விஜய் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.
