Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்யின் வெற்றிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய்யை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், தனது வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் மூலமாக இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், தவெக தலைவர் விஜய் பல்வேறு தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகளில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, 18 வயதுக்குக் குறைவான குழந்தைகளைப் பயன்படுத்தி விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வேட்புமனுத் தாக்கலின் போது தமக்கு வருமான வரி பாக்கி இல்லை என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் மீது வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை வேட்புமனுவில் மறைத்துள்ளார். அதிக அளவில் பணத்தைச் செலவு செய்து, வெளிநாட்டினர் மூலமாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவெக கட்சியின் அடையாளங்களை அணிந்து கொண்டு, தேவாலயத்தில் முட்டிப் போட்டு விஜய் பிரச்சாரம் செய்துள்ளார்.

இதையும் படியுங்க  கேரளத்தில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா கொண்டாட்டம்..! அது நடந்துதானே ஆகணும்..!

தேர்தல் செலவுக் கணக்கு விவரங்களை இதுவரை அவர் முறையாகத் தாக்கல் செய்யவில்லை. மேலும், சமூக வலைத்தளங்கள் மூலம் செய்யப்பட்ட பிரச்சாரங்களுக்கான செலவு விவரங்களையும் தெரிவிக்கவில்லை. திருச்சி கிழக்குத் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இத்தகைய முறைகேடுகள் மூலம் அவர் வெற்றி பெற்றுள்ளதால் விஜய்யின் வெற்றியைச் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.

இந்தத் தேர்தல் வழக்கு முடியும் வரை திருச்சி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் எதையும் அறிவிக்கக் கூடாது. பல்வேறு அதிரடித் திருப்பங்களைக் கொண்டுள்ள இந்தத் தேர்தல் மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago