தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு காரணமாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 2 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 16 கடைசி நாளாகும், செப்டம்பர் 19 வாக்குப்பதிவும், அக்டோபர் 6ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆளுங்கட்சியான தவெகவை விட திமுக தலைமை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டியுள்ளது. அதாவது மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுகவின் தலைமைக் கழக சட்டத்துறை இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் எஸ். பரந்தாமனும், தாராபுரம் (தனி) தொகுதியில் எஸ். சுகன்யா போட்டியிடுகின்றனர்.
தவெக தரப்பில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமா ஆகியோர் தான் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பிலும் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர். இதனால் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எந்த இடைத்தேர்தல் வந்தாலும் ஆளுங்கட்சிக்கு சார்பாகவே முடிவுகள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
