அம்மா… என்னை இப்படி தூக்கிட்டு போறீங்களேம்மா…” அந்தக் குரலை மலைக்காற்று கேட்டிருக்கும்; மரங்கள் தலைகுனிந்திருக்கும். ஆனால் அரசாங்கத்தின் காதுகளுக்கு மட்டும் அது இன்னும் எட்டவே இல்லை.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி, அல்லேரி மலை ஊராட்சி, மருதவள்ளிமேடு. கூகுள் மேப்பில் தேடினால்கூட சிக்காத அந்த மலைக் குக்கிராமத்தில்தான் தேவேந்திரனின் கனவு வாழ்ந்தது. அவரது 17 வயது மகள் திவ்யா, அணைக்கட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர். இதயத்தில் ஓட்டையுடன் பிறந்த அந்தத் துடிப்பான மாணவி, வாழ்க்கையில் பெரிய கனவு கண்டவள்.
சென்னை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து, “பிள்ளை பிழைச்சுக்குவா… கூட்டிட்டு போங்க” என்று டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்தபோது தேவேந்திரனின் கண்களில் நம்பிக்கை ஒளி. மலை உச்சி ஓலை வீட்டுக்கு மகளை அழைத்து வந்தார். “நல்லா படிச்சு டீச்சராகணும்” என்று திவ்யா சிரித்தாள். அந்தச் சிரிப்பு இரண்டு நாட்கள்கூட நீடிக்கவில்லை.
திடீர் மூச்சுத்திணறல்… நெஞ்சைப் பிடித்துக்கொண்டு துடித்த மகளைத் தூக்கிக்கொண்டு மலையிலிருந்து ஓடினர் பெற்றோர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஐ.சி.யூ., வென்டிலேட்டர் என அனைத்து போராட்டங்களும் தோற்றன. நவம்பர் 2-ம் தேதி மாலை 3 மணிக்கு திவ்யாவின் இதயம் நிரந்தரமாக நின்றுபோனது.

அதன்பின் நடந்ததுதான் தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கும் கொடுமை. ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்க ஊசூர் அத்தியூர் வழியாக மலை அடிவாரம் வந்து நின்றது. “இதுக்கு மேல ரோடு இல்ல சார்… வண்டி போகாது!” என்று டிரைவர் கையை விரித்தார்.
2026-லும், சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்குப் பிறகும், ஒரு கிராமத்துக்குச் சாலை இல்லை என்பதுதான் இந்தியாவின் அவலம்.
கதறிய தாய், செய்வதறியாது நின்ற உறவினர்கள் இரண்டு மூங்கில் கழிகளில் போர்வை விரித்து டோலி கட்டினர். பிணமாகிப்போன மகளை அதில் கிடத்தி, தந்தை ஒரு முனையையும் உறவினர் மறுமுனையையும் தோளில் தூக்கினர்.
கொட்டும் மழை, வழுக்கும் பாறைகள், மழைச்சேறு, இருட்டும் வானம் என கரடுமுரடான ஒற்றையடிப் பாதையில் கண்ணீரோடு மலை ஏறினர். தூரம் 5 கி.மீயா, 7 கி.மீயா, 10 கி.மீயா என்று பல கணக்கு சொல்லப்படுகிறது. சாலை போட்டிருந்தால்தானே சரியான அளவீடு தெரியும்! தூரம் எதுவாக இருந்தால் என்ன… ஒவ்வொரு அடியும் அவமானம்; ஒவ்வொரு அடியும் அரசுகளின் தோல்வி. வழியில் “திவ்யா… எந்திரிச்சு வாம்மா… நாம நடந்தே போயிடலாம்” என்று புலம்பியபடி தாய் மயங்கி விழுந்தார்.

இது முதல்முறை அல்ல. இதே அல்லேரி மலையில் 18 மாதக் குழந்தை தனுஷ்காவின் உடல் இப்படித்தான் தூக்கிச் செல்லப்பட்டது. திருப்பத்தூர் நெக்னாமலையில் முதியவர் கோவிந்தன் உடல் 7 கி.மீ தூக்கிச் செல்லப்பட்டது. தருமபுரி அழகட்டுமலையில் மல்லிகா அம்மாள் வயிற்றுவலியால் துடிக்க டோலியில் தூக்கிச் செல்லப்பட்டார்.
மலைவாழ் மக்கள் என்றால் மனிதர்கள் இல்லையா? பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் எங்கே? முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் யாருக்காக? ஓட்டு கேட்க மட்டும் மலையேறும் அரசியல்வாதிகள், சாலை போடுவதற்கு மட்டும் வனத்துறை தடை என்கிறார்கள். ஒரு உயிரின் மதிப்பைவிட வனத்துறை விதி பெரிதா?
எம்.எல்.ஏ-க்களே, எம்.பி-க்களே… ஓட்டு கேட்டு மலையேறும்போது வலிக்காத கால்கள், செயலகத்தில் நடந்து ஒரு கையெழுத்து போட்டால் மருதவள்ளிமேடுக்கு சாலை வந்துவிடும்.
திவ்யாவின் மரணம் வெறும் செய்தி அல்ல; அரசுகள் மீதான குற்றப்பத்திரிகை. இனியும் ஒரு டோலி மலையேறக்கூடாது. இதைச் செய்யாவிட்டால், மலைவாழ் மக்களின் கண்ணீர் உங்கள் அரியணையை அசைக்கும்.
