Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

P. Shanmugam

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் மரபு ஆடையான வேட்டி, சட்டை அல்லது புடவை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற அரசின் ஆலோசனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு நாள் சிறப்பு விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை உள்ளிட்ட மரபு ஆடைகளை அணிந்து அலுவலகத்திற்கு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் பேசுகையில், “முதலமைச்சர் வாரத்தில் ஒருநாள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருகிறார். அதேபோல், தலைமைச் செயலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஒருநாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.

வேட்டி, சட்டை அணிவது தமிழர்களின் மரபைப் போற்றுவதுடன், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவும். இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வாரத்தில் ஒருநாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘மரபு ஆடை தினம்’ கடைப்பிடிக்கப்பட உள்ளது. மேலும், தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

இதையும் படியுங்க  விட்டில் பூச்சிகளாக வீழ்ந்துவிடாதீர்கள்..! அனைவரும் ஒன்று கூடுவோம்.. எடப்பாடி அழைப்பு..!

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும் என அரசாணை வெளியிடத் திட்டமிட்டிருப்பது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மரபு ஆடைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களும் தங்களுக்குரிய மரபு உடைகளை அணிந்து வந்தால், அது தேவையற்ற விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பும்.

குறிப்பாக, எந்த உடை உண்மையான மரபு ஆடை என்ற விவாதம் உருவாகக்கூடும். தற்போதைய சமூகச் சூழலில் ஆடை தொடர்பான இத்தகைய வழிகாட்டுதல்கள் தவறான முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு ஊழியர்களின் ஆடைத் தேர்வு சுதந்திரத்தில் தேவையற்ற கட்டுப்பாடுகள் திணிக்கப்படவும் வாய்ப்புள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் மரபு ஆடை அணிந்து வர வேண்டும் என்ற ஆலோசனையைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயற்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  சி.ஜோசப் விஜய் எனும் நான்..! 3 திட்டங்களில் முதல் கையெழுத்து..! பெண்கள் போற்ற பிள்ளையார் சுழி..!

இதற்கிடையே, அமைச்சர் ராஜ்மோகன் மீது மற்றொரு விவகாரத்திலும் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தனக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருந்தார். இதைக் குறிப்பிட்டுச் சண்முகம், லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் யார் என்பதை அமைச்சர் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் மீது ஏன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், அரசின் செயல்பாடுகள் தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தொடர்ந்து கடுமையான கருத்துகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, அரசு தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது என்றும், ஆதரவு அளிக்கும் கட்சிகளின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“அரசுக்கு திமிர்த்தனம் வேண்டாம். எங்களுடைய ஆதரவில்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டால் நாங்கள் வேறு முடிவெடுக்க வேண்டியிருக்கும்” என்று அவர் ஏற்கெனவே பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். மேலும், தவெக அமைச்சரவையில் அதிமுகவையோ அல்லது அதன் பிரிவுகளையோ சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டால், சிபிஎம் தனது ஆதரவை மறுபரிசீலனை செய்யும் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படியுங்க  ஜூலி லைஃப் முடிஞ்சது..? கழற்றி விட்ட திமுக.. கிட்னி திருட்டு வழக்கை கையெடுக்கும் தவெக?

“விஜய் சார், உங்களுக்கு மக்கள் 34 சதவீத வாக்குகள்தான் அளித்திருக்கிறார்கள். அரசுக்கு திமிர்த்தனம் வேண்டாம். நீங்கள் தனித்து அதிகாரம் செலுத்தும் நிலையில் இல்லை; எங்களுடைய கூட்டணி ஆதரவில்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்ற தொனியிலும் பெ. சண்முகம் பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.

தவெக அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே, வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஎம் பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து எதிர்ப்புகளையும் எச்சரிக்கைகளையும் பொதுவெளியில் முன்வைத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது அரசு ஊழியர்களின் ஆடை தொடர்பான ஆலோசனைக்கும் சிபிஎம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் விவாதப் பொருளாகியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago