தவெக மற்றும் விஜயின் செயல்பாடுகள் திமுகவை எதிர்த்து அழிப்பது போலவும், அதிமுகவை அரவணைத்து ஆக்கிரமிப்பு செய்வது போல இருப்பதாக கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சட்டமன்றத்தில் சர்க்காரியா கமிஷன் குறித்த கருத்தை முன்வைப்பது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய திமுக எதிர்ப்பு அலையை தனதாக்கிக் கொள்வதற்கான முயற்சியாக தெரிகிறது. அதேபோல், அண்ணா, எம்ஜிஆர், என்டிஆர் என அறிஞர் அண்ணா அவர்களையும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும் கையில் எடுக்கிறார் விஜய்.
ஸ்டாலின் அவர்கள் 2021–26 காலகட்டத்தில் தவறு செய்த திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பேசுகிற விஜய், அதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலத்தில் தவறு செய்த அமைச்சர்கள் மீது ஏன் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கவில்லை. குறிப்பாக, நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலுமணி மீதான ஊழல் வழக்கில் நீதிபதி கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
அப்படியானால், விஜயின் நோக்கம் முழுமையான ஊழல் ஒழிப்பு அல்ல; ஊழல் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி அரசியல் செய்வதுதானா என்ற கேள்வி எழுகிறது. தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதிலும் திமுக vs தவெக என்று தான் இருபுறமும் களம் அமைக்கப்படுகிறது. தவெக மற்றும் விஜயின் செயல்பாடுகள் திமுகவை எதிர்த்து அழிப்பது போலவும், அதிமுகவை அரவணைத்து ஆக்கிரமிப்பு செய்வது போலவும் உள்ளன.
பல ஆண்டுகளாகப் பல முறை எடுத்துச் சொல்லியும், இதையெல்லாம் புரிந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழ் காக்கப்பட வேண்டும் என்றால், அவர் உருவாக்கிய அதிமுக வளர வேண்டும் என்றால், அதற்கு ஒரு தலைமை மாற்றம் அவசியம் என தெரிவித்துள்ளார்.
