Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில், அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பொறுப்புக் காலத்தில், கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இந்த பணிக்காக 654 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 440 பேர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். அதன் பின்னர் 54 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரியும், தங்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும், கருணை அடிப்படையில் 2016ஆம் ஆண்டு தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர்.

முதலில் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தேர்வு நடவடிக்கைகளில் பங்கேற்காதவர்கள் பணி நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடர உரிமை இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, 11 பேர் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவில், தங்களுக்கு உரிய தகுதி இருந்தும் முறையான விளம்பரங்கள் செய்யப்படாததால் இளநிலை உதவியாளர் தேர்வு நடைமுறையில் பங்கேற்க முடியவில்லை என்றும், அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியின் செல்வாக்கின் காரணமாக விதிமுறைகள் மற்றும் இடஒதுக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் ஒரே நாளில் 54 பேர் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

அந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகவோ அல்லது முறையான தேர்வு நடைமுறைகளோ பின்பற்றப்படாமல் உள்ளாட்சி துறையில் 54 பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இது “புறவாசல் வழியாக” நடந்த பணி நியமனங்கள் எனக் கண்டறிந்த நீதிமன்றம், கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இந்த முறைகேடான நியமனங்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலியான பணியிடங்களை தகுதியான நபர்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago