தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான, அவரது முந்தைய பதவிக்காலம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள மாநிலத்தின் ஊழல் தடுப்பு மற்றும் ஊழல் எதிர்ப்புப் பணியகம் மூலம் ஞானேஷ் குமார் மீது விசாரணை நடத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார். இந்த வழக்கு, ஞானேஷ் குமார் கேரளாவின் பொதுப்பணித் துறையின் செயலாளராக இருந்த காலத்துடன் தொடர்புடையது.
கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இது குறித்து, ”தேவையான அரசு ஒப்புதலைப் பெற்றவுடன் விசாரணையைத் தொடங்கலாம் என்று கூறும் சட்டக் கருத்தை, கோப்புடன் சேர்த்து அரசு பெற்றுள்ளது. முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு, செவ்வாய்க்கிழமை மாலை அவர் விசாரணைக்கு அனுமதி வழங்கினார். ஊழல் தடுப்பு மற்றும் ஊழல் எதிர்ப்புப் பணியகம் இப்போது இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தும்” எனக் கூறியுள்ளார்.
₹2 கோடி லஞ்சக் குற்றச்சாட்டு
ஞானேஷ் குமாருக்கு எதிராக இரண்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார். ஒன்று எம்.வி. அனூப் கோபாலாலும், மற்றொன்று சஜ்ஜன் குமாராலும் தாக்கல் செய்யப்பட்டது. ஞானேஷ் குமார் கேரளாவில் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தபோது, ஒரு சாலைத் திட்டத்திற்கான பணத்தை விடுவிப்பதற்கு ஈடாக ₹2 கோடி லஞ்சம் கேட்டதாக சஜ்ஜன் குமார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கில் மலேசியா மற்றும் கேரளாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய PATI-BEL என்ற கூட்டமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டமைப்பு, திருவனந்தபுரத்தில் இருந்து கேரளாவின் அங்கமாலி வரையிலான பிரதான மத்திய சாலைத் திட்டத்தில் பணியாற்றி வந்தது. இத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி அளித்து வந்தது. இத்திட்டம் தொடர்பான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்று புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். அப்போதைய பொதுப்பணித்துறை செயலாளர் ஞானேஷ் குமார், கட்டணப் பட்டியலை நிறைவேற்ற ₹2 கோடி கேட்டதாக சஜ்ஜன் குமார் கூறுகிறார்.
மலேசிய திட்ட அதிகாரியின் தற்கொலை
இந்த வழக்கில், ஒரு மலேசிய நிறுவனத்தின் திட்ட அதிகாரியான லீ சீ பீனின் தற்கொலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையால் கட்டணங்கள் செலுத்தப்படாததால் அந்நிறுவனம் நிதி நெருக்கடியில் இருந்ததாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. லீ சீ பீனின் மரணத்திற்குப் பிறகு, அவரது தற்கொலைக் குறிப்பில் ஞானேஷ் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17A பிரிவின் கீழ் இத்தகைய விசாரணையைத் தொடங்குவதற்கு அரசாங்கத்தின் முன் அனுமதி தேவை என்று கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார். சட்ட ஆலோசனை பெற்ற பின்னர், ஊழல் தடுப்புத் துறை அரசாங்க அனுமதியைக் கோரியது. விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக சட்டக் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளை விரிவாக விசாரிப்பது ஊழல் தடுப்புப் பணியகத்தின் பொறுப்பு என்று அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார். விசாரணை அமைப்பானது இந்தக் குற்றச்சாட்டுகளையும் அவை தொடர்பான உண்மைகளையும் விசாரிக்கும்.
பொதுப்பணித்துறை செயலாளராக ஞானேஷ் குமார் பதவி வகித்த காலத்தில் சாலைத் திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த பிரச்சினை முன்னரே வெளிவந்திருந்தது. மலேசியப் பொறியாளர் லீ சீ பீன் மரணத்தைத் தொடர்ந்து 2006-ல் ஊழல் தடுப்பு விசாரணை தொடங்கப்பட்டது. ஆனாலும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. தற்போது, ஒரு புதிய புகாரின் அடிப்படையில் விசாரணை தொடரப்படுகிறது. முந்தைய விசாரணையில் புகார்தாரர், பிற தொடர்புடைய நபர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டதா? என்பதையும் இந்த விசாரணை ஆராயும்.
