ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான கேப்வெர்டேவில் ஆம்னி பேருந்து ஒன்று பள்ளிக்குழந்தைகள், சிறுவர்கள் என 32 பேர் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்து. பேருந்து மலைப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் கடினமான பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த 25 உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்ற பேருந்து விபத்தில் சிக்கி 25 உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
