Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

SI Prabhu

காவல்துறையில் ஒரு காவலர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்து, எவ்வித ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது கறையோ இன்றி 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெறும் தருணம் என்பது மிகவும் புனிதமானது. அந்த நீண்டகால உழைப்பையும் தியாகத்தையும் போற்றி, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் வழியனுப்புவது காவல்துறையின் மரபும், சமூகக் கடமையுமாகும்.

ஆனால், திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அதிகாரத் தோரணையும், ஒருசில தனிநபர்களின் ஆதிக்கமும் இந்த நன்மதிப்பிற்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 31.05.2026 அன்று 41 ஆண்டுகால நேர்மையான சேவைக்குப் பின் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரும் , உதவி ஆய்வாளரான தனக்கும், சக அதிகாரிகளுக்கும் நியாயமாகப் கிடைக்க வேண்டிய பணி ஓய்வு மரியாதை திட்டமிட்டே மறுக்கப்பட்டதாகவும், இதற்கெல்லாம் பின்னணியில் மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரபு என்பவரின் ஆதிக்கமும் தலையீடும் தான் காரணம் என குற்றம்சாட்டி வேதனையுடன் அவர் தெரிவித்துள்ள கடிதம் ஒன்றை நமக்கும் அனுப்பி வைத்தனர்.

அந்த கடிதத்தில், ”சுமார் 41 ஆண்டுகள் காவல்துறையில் எந்த ஒரு சிறு தண்டனையும் பெறாமல் துறை ரீதியான அனுமதி பெற்று ஒரு கார் மற்றும் ஒரு வீடு என்ற பொருளாதாரத்தோடு பொதுமக்களுக்கு சேவை செய்து நாணயமான முறையில் கடந்த 31.05.2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றேன்.

தமிழ்நாடு முழுவதும் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்றவர்கள் அனைவரையும் கடந்த 29.05.2026 ஆம் தேதி அனைத்து மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் சிறப்பு செய்து வழி அனுப்பி வைத்தனர்.

ஆனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் என்னையும், என்னோடு பணி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தன் என்பவரையும் 29.05.2026 ஆம் தேதி பணி ஓய்வு பெறும் சான்றில் தங்களது கையொப்பம் பெற்றும், அதனை அலுவலக செயல்பட்ட தினத்தில் வழங்காமல், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 31.05.2026 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பணி ஓய்வில் செல்ல சான்று பெற மாவட்ட காவல் அலுவலகம் வரும்படி காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது

அந்த தகவலை வாணியம்பாடி நகர காவல் நிலையம் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து எனக்கு தெரிவிக்கவில்லை. நானாக தகவல் தெரிந்து மாவட்ட காவல் அலுவலகத்திற்கு காலை 10.00 மணிக்கு வந்து, ஓய்வு பெறும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தன் குடும்பத்தோடு காத்திருந்தபோது காலை 11.00 மணிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அவரது அலுவலகத்திற்கு வந்த பின்னரும், “தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரபு ” அவர்கள் வந்த பின்பு தான் சான்று வழங்க உள்ளதாக தகவல் தெரிந்து மன உளைச்சலோடு காத்திருந்தோம்.

இதையும் படியுங்க  மர்ம சூட்கேஸ்.. சிதறிய தலை.. சென்னை பெரம்பூரில் அரங்கேறிய பகீர் கொலை! யார் அந்த நபர்?

பகல் 1.00 மணிக்கு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரபு வந்த பின்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அவரது உடல் நிலையை பொருட்படுத்தாமல் காத்திருந்து பணி நிறைவு சான்றினை எங்களுக்கு அன்போடு வழங்கினார்.

நான் அயல் பணியாக பணி செய்து வந்த DCRB அலுவலகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் இருவரும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் பாதுகாப்பு பணிக்கு சென்றதால் எனக்கு உரிய மரியாதை கிடைக்க பெறவில்லை.

அதே நேரம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இருந்தும் எந்தவித தகவலும் தெரிவிக்கப்படாதது நான் காவல்துறையில் பணியிலிருந்து வெளியில் வரும் பொழுது என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. Police Social Media Cell wo whatsapp, face book, X, instagram சமூக வலைதளங்களில், மாவட்டத்தில் வழக்கமாக ஓய்வு பெற்று செல்பவர்கள் குறித்த தகவலை பதிவேற்றம் செய்து வந்ததை போல, 31.05.2026 அன்று ஓய்வில் சென்ற எங்கள் இருவர் குறித்த தகவலை பதிவேற்றம் செய்யவில்லை.

யாருக்கும் எந்த செய்தியும் தெரியாத வண்ணம் எங்களை வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அனைவரும் ஓய்வு பெற்று விட்டீர்களா என கேள்வி கேட்கும் நிலைக்கு ஆளாகி உள்ளோம்.

இதற்கு காரணம், திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மாவட்ட காவல் அலுவலகத்தில் தனி பிரிவு உதவி ஆய்வாளராக நானும், என்னுடன் அன்றைய தினத்திலிருந்து தற்போது பணியில் தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வரும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரபு அவர்கள்தான் , தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக வந்ததிலிருந்து இந்த மாவட்டத்திற்கு பணிபுரிய வந்த உதவி ஆய்வாளர்கள் 1.அமர்நாத், 2.ரவி, 3.சரத்குமார், 4.ரஞ்சித், 5.சீனிவாசன், 6.நாசி, 7.வெங்கடேசன், 8.நவீன், 9.ராஜேஷ் நான் உட்பட முழு அளவில் தனி பிரிவில் முக்கிய நிர்வாக பணிகளை செய்ய விடாமல் இவரது ஆதிக்கம் இருந்ததை கண்டு ஒவ்வொருவராக ஒவ்வொரு காரணம் கூறி வெளியேறி விட்டோம்.

இதனால் திருப்பத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து தனி பிரிவு காவலர்களும் இவரது கட்டுப்பாட்டில் தனி பிரிவு இருப்பது போன்று பயந்து அனைத்து தகவல்களையும் இவருக்கு மட்டுமே தெரியப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  Round Up: மாமூல் வேட்டையில் திமுக, அதிமுக, தவெக புள்ளிகள்..? திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் உச்சபட்ச அட்டூழியங்கள்..!

அதனால் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக வந்தவர்களையும் ஒரு பொம்மையாக பயன்படுத்தி அவர்களையும் திறமை இல்லாதவர்களாக உயர் அதிகாரிகளிடம் ஒரு சூழ்நிலையை உருவாக்கி வெளியேற்றி வந்ததால் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் இவரை கண்டு பயந்து நடுங்குகின்றனர் எஸ்பி அலுவலகமே இவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளது

வயது மூப்பின் காரணமாக பணி ஓய்வில் கடந்த மாதம் இரண்டு உதவி ஆய்வாளர்கள் ஓய்வு பெற்ற போதும் , தற்போது நாங்கள் பணி ஓய்வில் சென்ற போதும் “காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலம் சிறப்பு பெற முடியாமல் போனதற்கும் இந்த பிரபு தான் காரணம்

நான் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இருந்து DCRB அலுவலகத்திற்கு அயல் பணியாக வந்த ஒன்றரை ஆண்டுகளில் நான்கு முறை எனது இறுதி கால பணியினை செய்திட பணியிட மாறுதல் கோரி மனு கொடுத்தும் எனது பணியிட மாறுதலுக்கு மறைமுகமாக இவரது குறுக்கீட்டின் காரணமாக முன்பு இருந்த காவல் கண்காணிப்பாளர்கள் இறுதிவரை எனக்கு பணியிடமாறுதல் வழங்காமல் தொடர்ந்து DCRB அலுவலகத்திலேயே அயல் பணியாக பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனிப்பிரிவு உதவியாளர் பிரபு

ஆகையால் தனிப்பிரிவு உதவியாளர் பிரபு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் கண்காணிப்பாளர்கள் , மாவட்டத்தின் காவல் நலன் கருதியும் இனி வரும் காலங்களில் ஓய்வு பெறும் அனைத்து காவலர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்கவும், தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளாக தனி பிரிவில் அராஜகமாக அமர்ந்திருக்கும் பிரபு, அனைத்து தனிப்பிரிவு காவலர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும், இவர் தனிப்பிரிவு அலுவலகத்தில் உள்ள AC வசதியுடன் கூடிய மூன்று அறைகளை பயன்படுத்தி கொண்டும் சொகுசாக வாழ்ந்து வரும் இவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என இவ்வாறு கூறப்பட்டுள்ளது

“பிரபு பற்றி நம்பத்தகுந்த காக்கி வட்டாரங்களில் விசாரித்தபோதபோது? வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை சர்கிளை சேர்ந்தவர் பிரபு, இவர் கடந்த 7 வருடங்களாக திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் தனிப்பிரிவு எஸ்ஐ ஆக பணியாற்றி வருகிறார் மாவட்டம் உதயமானது முதல், மாவட்ட எஸ்பி ஆக வந்த பலரும் புரமோஷனில் வருபவர்கள் அதிலும்ஸ வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் , இவர்களுக்கு மாவட்டத்தை பற்றி அதிகம் தெரியாததால் எஸ்பி தனிப்பிரிவு எஸ்ஐ பிரபு’விடம் தான் கேட்டறிந்து கொள்வார்கள்… அதனாலேயே இவரை பணியிடம் மாற்ற தயங்கி வருகின்றனர் ,இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பிரபு, எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க வந்தால், எஸ்பியிடம் செல்லாதவாறு இவரே கீழ்தளத்தில் தடுத்து நிறுத்தி புகார் மனுக்களை பெற்று விடுகிறார், குறிப்பாக தனக்கு வேண்டிய நபர்கள் மீது புகார்கள் இருந்தால் அந்த நபர்களுக்கே திருப்பி அனுப்பி வைப்பதும் , புகார் அளிப்பவர்களை காட்டி கொடுப்பதும் இவரது வாடிக்கை என்கிறார்கள், குறிப்பாக சாராயம் போதைப்பொருள், மண் , மணல் கடத்தும்‌ கும்பல் மீது புகார் அளித்தால் அடுத்த நொடியே கடத்தல் கும்பலுக்கே இவர் மூலம் தகவல் செல்கிறதாம் ,இரண்டு வருடங்களுக்கு முன்னர் குறிசிலாப்பட்டு அருகில் இரவு நேரத்தில் கிராவல் மண் திருடும்போதே அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் ஸ்பாட்டில் இருந்தவாறே மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார் அடுத்த நொடியே தகவல் கொடுத்த நபரை எஸ்பி அலுவலகத்தில் இருந்து காட்டி கொடுத்ததால் மண் கடத்தல் கும்பல் அந்த இளைஞரை அடித்து வீசிவிட்டு சென்றது அந்த இளைஞர் சிகிச்சை பெற்று பின்னர் மீண்டார் இந்த தகவலையும் பிரபு மூலம்தான் சென்றதாக அப்பகுதி சமூக ஆர்வலர்களே அப்போது கொதித்தனர், இவர் மீது 100-க்கும்‌ மேற்பட்ட புகார் குவிந்துள்ளது ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக அனைவரும் பணியிடம் மாற்றம் சென்ற நிலையில் பிரபு செல்லவில்லை 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியிலிருந்து வருவதும் ரகசிய தகவல்களை கசிய விட்டு வருகிறார் என்பது குறித்தும் அப்போதைய கலெக்டர் சிவசவுந்திரவள்ளியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள் , ஆம்பூர் வாணியம்பாடி உட்கோட்டங்கள் ஆந்திரா வனப்பகுதியையோட்டி அமைந்துள்ளது இந்த பகுதியைச் சேர்ந்த பிரபு இப்பகுதியில் நடக்கும் குற்றங்களை மறைத்து விடுவதாலே மாவட்டத்தில் குற்றங்கள் தலைவிரித்தாடுகிறது இவருக்கு கீழ் சிபிசிஐடி போலீசார் மாசம் கப்பம் கட்டும் பணத்தில் ஏலகிரிமலை , வாணியம்பாடி ஏ2பி ஓட்டல் அருகில் சொத்துக்கள் குவித்துள்ளார் என அடுக்கினார்கள் , இப்படி பல புகார்களுக்குள்ளான பிரபு மீது நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன? எழு வருடங்களாக தனிப்பிரிவு எஸ்ஐயாக வலம் வரும் இவரை காவல் நிலையங்களில் பணியுரிய வாய்ப்பு வழங்கினால் திறமையுடன் இவரால் புணியாற்ற முடியுமா ? இல்லை அந்த இடத்திற்கு தகுதிவாய்ந்த காவலர்கள் வேறு யாரும் கண்ணுக்குத் தெரியவில்லையா ? என கேள்விகள் எழாமல் இல்லை.

இதையும் படியுங்க  பள்ளிக் காதல் மனைவி… கல்லூரித் தோழி..! இரண்டுக்கும் மத்தியில் சிக்கிய ராணுவ வீரர்..! ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த பயங்கர டவிஸ்ட்..!
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago